1932-ஆம் ஆண்டு இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டாகும். தலித்துகளின் அரசியல் தன்னுணர்வை ...

Click here to read this mailing online.

Your email updates, powered by FeedBlitz

 
Here is a sample subscription for you. Click here to start your FREE subscription


  1. காசில்லதாவனையும் ”கலைப்பிரியமுள்ள கனவானாக” ஆக்கும் கிரிக்கெட்
  2. சினிமா: 18 -. ’பியாட்டா’ : உடலின் பொருளியல் பிம்பம்
  3. சினிமாவில் சலனிப்பது அகவெளியா? புறவெளியா? - பகுதி-1
  4. ரோஹித் தற்கொலையும் இடதுவாத நர்சரிகளும்
  5. “மேலும்” விருதிற்கான ஏற்புரை.
  6. More Recent Articles

காசில்லதாவனையும் ”கலைப்பிரியமுள்ள கனவானாக” ஆக்கும் கிரிக்கெட்


Image result for baloo cricketer1932-ஆம் ஆண்டு இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டாகும். தலித்துகளின் அரசியல் தன்னுணர்வை உருவாக்கிய டாக்டர் பாபாசாகெப் அம்பேத்கர் கலந்தகொண்ட, 1931-ல் லண்டனில் நடந்த, இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் பிரித்தானிய காலனிய அரசுதீண்டத்தகாதவர்களாகஒதுக்கப்பட்டவர்களுக்கு தனித்தொகுதி தருவதற்கு ஒப்புக்கொண்டது.  1932-ல் புனாவின் எரவாடா சிறையில் இருந்த மகாத்மா காந்தி இத்தனித் தொகுதி முறையை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதம் அறிவிக்கிறார். இறுதியில் காந்தியின் உயிரை காப்பாற்றியது அன்று ஏற்பட்ட புனா-ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மூவரின் கையொப்பமே. அந்த மூவரில் ஒருவர் அம்பேத்கர், மற்றொருவர் எம்.சி.ராஜா, மூன்றாமவர் பி. பாலு.   முதல் இருவரும் தலித் சமூக அரசியல் பணிகளில் நாடறிந்த தலைவர்கள். ஆனால், பல்வன்கர் பாலு எனப்படும் பி. பாலு எந்த சமூகப் பணிகளிலும், அரசியல் பணிகளிலும் அடையாளப்படுத்தப் படாதவர். வரலாற்றில் யார் என்று சொல்லப்படாமல் விடுபட்டவரான இவர் ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். “தாழ்த்தப்பட்ட ஒருவர் கிரிக்கெட் பந்துவீச்சாளராக புகழ் அடைந்திருப்பதற்காக நான் பெருமை அடைகிறேன்என்று அம்பேத்கரால் புகழப்பட்டவர்


33 ஃப்ர்ஸ்ட் கிளாஸ் ஆட்டங்களில் 179 விக்கெட்களைப் பெற்று இந்திய மக்களிடம் கிரிக்கெட்டில் நாயக அந்தஸ்து பெற்ற இவர், சாமர் என்கிற சக்கிலிய இனத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்”இந்து கிரிக்கெட்”- அணியின் முதுகெலும்பாக இருந்து, பிரித்தானிய காலனிய அணியை தோற்கடித்தவர். இந்திய மக்களிடம் காலனிய எதிர்ப்பிற்கான மனோபலத்தை தந்தவர். வெள்ளையர்களை வீழ்த்த முடியும் என்று காட்டியவர். இவரது வெற்றியை அன்றைய பத்திரிக்கைகள் காந்தியின் சுயராஜ்யக் கொள்கையின் வெற்றியாக விவரித்தன. தாழ்த்தப்படவர்களை ஒன்றிணைக்காமல் இந்திய விடுதலை சாத்தியமில்லை என்பதற்கு ஒரு சான்றாக இந்த வெற்றி கொண்டாடப்பட்டதுஇவரால் வெற்றியடைந்த இந்து அணி எனப்படும் உயர்சாதி பார்ப்பனர்களைக் கொண்ட கிரிக்கெட் அணி. முதன்முறையாக இந்திய மண்ணில் பெற்ற வெற்றி இது. அந்த வெற்றிக்கு காரணமான பாலு இந்த இடத்தை அடைந்த கதைதான் இந்து உயர்சாதி தீண்டாமை வெறி உருவாக்கிய சோக வரலாறாகும்.
1875-ல் தார்வாட் என்ற ஊரில் பிறந்தார் பாலுஅவரது குடும்பம் புனாவிற்கு இடம் பெயர்ந்த பிறகு அவரது இளமை வாழ்க்கை புனாவில் தொடர்ந்தது. அவரது தந்தை காலனிய அரசின் இராணுவத்தில் துப்பாக்கிகளையும் அதன் காட்ரிட்ஜ்களையும் சுத்தம் செய்யும் பணியை செய்து வந்தார்உயர்சாதியினர் தீட்டாக கருதி செய்ய மறுத்ததால், தனது ஒதுக்கப்பட்ட சாதிய பின்புலத்தால் பாலுவின் தந்தை இப்பணியை செய்து வந்தார். வெள்ளைக்காரர்களால் விளையாடப்படும் கிரிக்கெட்டில் தோலால் செய்யப்பட்ட பந்தை எடுத்துப்போடும் அந்ததீட்டா“-ன பணியை பாலு செய்து வந்தபோதுதான் கிரிக்கெட் பந்துவீச்சில்அவர் சிறந்த பயிற்சியைப் பெற முடிந்தது. ட்ரோஸ் என்கிற ஆங்கில அதிகாரிதான் பாலுவிற்கு பந்தவீச்சைக் கற்றுக் கொடுத்தார். இவரது பந்துவீச்சில் பயிற்சி பெற்றவரே ஜே. கிரீக் என்கிற புகழ்பெற்ற ஆங்கில பேட்ஸ்மென். ஆங்கிலேய கிரிக்கெட் வீரர்கள் பாலுவிற்கு இந்த பயிற்சிகளை தந்தாலும் அவரை தங்களுடன் விளையாட அனுமதிக்கவில்லை, காரணம் காலனிய மேட்டிமைத்தனமே.
பிரித்தானிய கிரிக்கெட் வீரர்களின் பயிற்சிகளில் பந்து வீச்சாளராக இருந்ததால், பரவலாக எல்லா கிரிக்கெட் அணிகளிடமும் ரசிகர்களிடமும் புகழடைந்தார். அவரை தங்களது அணியில் சேர்த்துக் கொள்ள பார்ப்பன உயர்சாதி அணி தயாராக இல்லை என்றாலும் சில தெலுங்கு ஆட்டக்காரர்கள் தாங்கள் வெற்றிப்பெற அவர் அவசியம் என்றவகையில் பேசி அவரை சேர்த்துக் கொண்டனர்ஆனாலும், கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு சடங்கான தேநீர் இடைவேளையின் போது அவர் ஆட்ட மைதானத்திற்கு வெளியே போய்விடவேண்டும். உயர்சாதி கிரிக்கெட் வீரர்களுடன் அவர் சேர்ந்து நிற்கக் கூடாதுஅவருக்கு அருந்திவிட்டு உடனே எறிந்து விடும் வண்ணம் மட்கலயத்தில் உணவும் தேநீரும் தரப்பட்டது. அதாவது இன்றும் சில இடங்களில் வழங்கி வரும் இரட்டைக் குவளை முறைப்போலஒரு நட்சத்திர ஆட்ட நாயகனுக்கே சாதியம் முன்வைக்கும் நிலை இதுதான்.
அதன்பின் புனே அணியிலிருந்துபம்பாய் அணிக்கு அவரும், அவரது தம்பிகளான சிவ்ராம், கண்பத் மற்றும் விதால் ஆகியோரும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பாலு சகோதரர்கள் என்கிற இந்த நான்கு தாழ்த்தப்பட்ட இளைஞர்களும் இந்திய கிரிக்கெட்டின் புகழ் பெற்ற ஆட்டக்காரர்கள் ஆவார்கள்.  1906-ஆம் ஆண்டு நடந்த பிரித்தானியருக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இச்சகோதரர்கள் முக்கிய பங்காற்றி இந்திய அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர்.  “இந்தியன் சொஷியல் ரிஃபார்மர்“- என்கிற இதழ் இந்த வெற்றியை இந்தி தேசிய ஒற்றுமைக்கான சாதியத்தை மீறிய சமவாய்ப்பின் அவசியத்தை வலியுறுத்தும் ஒன்றாக எழுதியதுஇதன் மற்றொரு விளைவாக இந்திய தேசியம் எனும் வளர்ந்து வரும் கருத்தாக்கத்தின் ஒரு உதாரணமாக இது கொள்ளப்பட்டது. இந்திய தேசியத்தின் கட்டமைப்பில் மட்டுமல்ல அதை இன்றுவரை காத்துவரும் பணியையும் செய்கிறது கிரிக்கெட். ஆனாலும், அன்றும் சாதி இந்துக்கள் தீண்டத்தகாதவர்களின் தலைமையில் ஆடுவதற்கு மட்டும் தயாரில்லைஇன்று திறமைதான் முக்கியம் என்று பேசும் உயர்சாதி பார்ப்பனர்கள்அன்று இத்தனை திறமை இருந்தும் பாலுவை கேப்டனாக நியமிக்கத் தயாரில்லைமற்ற ஆட்டங்களைவிட கிரிக்கெட்டிற்கு கேப்டனின் தலைமைப் பொறுப்பு ரொம்பவும் முக்கியமானது. அப்பொறுப்பை தந்து தாழ்த்தப்பட்ட ஒருவரின் தலைமையின்கீழ் விளையாடத் தயாராக இல்லை.
1910 முதல் 1920 வரை ஒவ்வொரு ஆண்டும் பாலுவை கேப்டனாக நியமிக்க கோரி போராட்டம் நடந்ததுஆனால் புதிதாக சேர்ந்த உயர்சாதி பார்ப்பனர்களுக்குக்கூட அந்த வாய்ப்பு வழங்கப்பட்டதே ஒழிய அனுபவம் மிக்க திறமையான தாழ்த்தப்பட்ட ஆட்டக்காரர்களுக்குத் தரப்படவில்லைஒரு இளம் பார்ப்பனருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டதை ஒட்டி எதிர்ப்பு தெரிவித்து பாலு சகோதரர்கள் கிரிக்கெட்டை விட்டு வெளியேறினார்கள்.   சாதியரீதியான பாகுபாடு நிலவுவதையும் விளையாட்டுக்கான திறமைகள் பார்க்கப்படுவதில்லை என்பதையும் கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். வெகுமக்களிடம் ஓரளவு அவர்களுக்கு ஆதரவு பெருகியது. அதன்பின் 1920-ல் காந்தி இந்திய தேசியத்தின் தலைவராக ஆனபோது அவரது தீண்டாமை எதிர்ப்பின் விளைவாக திரும்பவும் பாலு சகோதரர்கள் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டு பாலுவிற்கு முதலில் உதவி கேப்டன் பதவியும், அவருக்கு பின் அவரது தம்பி விதால் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இச்சகோதரர்களின் திறமையான நிர்வாகத்தால் கிரிக்கெட் அணி தொடர் வெற்றிகளைப் பெற்று வந்ததுஇந்த கிரிக்கெட் வெற்றிகள் காந்தியின் சுயராஜ்ய கொள்கையின் நடப்பு உதாரணங்களாக கொள்ளப்பட்டன். தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு சம அந்தஸ்து தந்தால் இந்தியா வெற்றிக் கொள்வது நிச்சயம் என்பதை இவை மெய்ப்பிப்பதாக பத்திரிக்கைகளில் எழுதப்பட்டது. பொதுமக்கள் ஒவ்வொரு கிரிக்கெட் வெற்றிக்குப் பிறகுகேப்டன் விதால் வாழ்க! இந்துக்களே சாதி ஏற்றத்தாழ்வை மறப்போம்! மகாத்மா காந்திக்கு ஜே!” என்றும் கோஷமிட்டு கொண்டாடினர். இது நமக்கு சொல்லும் செய்தி கிரிக்கெட் அதன் ஆடுகளத்தையும் தாண்டி மக்களின் பொதுவெளியில் கட்டமைக்கும் மன அமைப்பையே.  அதிகாரம் நிரம்பிய காலனிய ஏகாதிபத்திய வெள்ளையின அணியை எதிர்த்து கிடைத்த இந்த வெற்றி மக்களின் மனத்தளத்தில் ஏற்படுத்தியிருக்கம் நம்பிக்கை என்பது எண்ணிப் பார்க்த்தக்கதுபாலு சகொதரர்களின் கதை என்பது இந்திய கிரிக்கெட் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாற்றில் ஒரு மைல்கல் மட்டுமல்ல இந்திய தேசிய கட்டமைப்பின் வெகுசன உளவியலை கட்டமைத்த ஒரு முன்மாதிரியும்கூட.
ஆனால் இத்தகைய வரலாற்றின் குறிப்பிடத் தகுந்த வீரரான பாலு இந்துமகாசபையின் ஆதரவாளராக மாற்றப்பட்டு பின்னாளில் இந்துமகாசபை மற்றும் காங்கிரஸின் கருத்தியலுக்கு பலியாகி புனா ஒப்பந்தம் ஏற்பட வழிவகை செய்து அம்பேத்கருக்கு எதிராக மாறினார். 1933-ல் நடந்த தேர்தலில் இந்துமகாசபை பம்பாய் நகராட்சிக்கு இவரை வேட்பாளராக அறிவித்ததுஆனால் எதிர்த்து நின்ற உயர்சாதி வேட்பாளரிடம் தோற்றுப்போனார். இந்திய தேர்தலில் இந்துமகாசபையானலும் சரி எந்த மகாசபையானாலும் சரி சாதி என்பது ஒரு தீர்மானகரமான காரணிதானே. அதன்பின் அம்பேத்கருக்கு எதிராக இவரை ஒரு தலித் உட்கட்சி தலைவராக காங்கிரஸ் பயன்படுத்த துவங்கியது.  1937-ல் தாழ்த்தப்பட்வர்களுக்கான தனித்தொகுதியான பம்பாய் சட்டமன்றத் தொகுதியில் அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸால் இவர் நிறுத்தப்பட்டார். அதில் அம்பேத்கரால் தோற்கடிக்கப்பட்டார். எந்த உயர்சாதியால் எந்த மதத்தால் புறக்கணிக்கப் பட்டாரோ அவர்களுக்கே இறுதியில் ஆயதமாக பயன்பட்டார் என்கிற இவரது வரலாற்றில் உள்ள அந்த முரண், இன்றுவரையில் திரும்ப திரும்ப நிகழும் ஒரு தீர்க்க இயலாத முரணாக நிலவி வருவது கண்கூடு.
18-ஆம் நூற்றாண்டின் மத்தியில்தான் கிரிக்கெட் இந்தியாவிற்கு பிரித்தானிய மாலுமிகளாலும், படைவீரர்களாலும் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் இந்திய அணி பம்பாயில் பொருளியல் ஆதிக்கம் வகித்தவந்த படித்த மேட்டிமை வர்க்கத்தைச் சேர்ந்த பார்சிகளால் உருவாக்கப்பட்டது. பார்சிகள் தங்களை பிரித்தானிய குடியேறிகளுடன் அடையாளப்படுத்திக் கொள்ளவும் தங்களது உயர் வர்க்க அடையாளத்தைக் காக்கவும் முதன்முதலாக கிரிக்கெட்டைப் பயன்படுத்தினர். பார்சிகளுக்கு இயல்பிலேயே இந்திய மண்ணில் "வந்தேறிகள்" என்கிற ஒரு அடையாள நெருக்கடி இருந்து வந்ததால் அவர்கள் இந்த புதிய அடையாளத்தை கட்டமைக்க முயன்றனர்.  30-ற்கும் மேற்பட்ட பார்சி கிளப்புகள் ரோமானிய கடவுளின் பெயரால்1850-60 களில் உருவாக்கப்பட்டது. இதில் வெளிப்படையாகவே தெரிவது பிரித்தானிய அடையாளத்தைப் பெறுவதற்கான முயற்சியேபார்சிகள் கிரிக்கெட் வழியாக ஆங்கிலேய உடைகளை உடுத்த துவங்கினர்அதன்பின் இந்துக்கள் தங்களுக்கான அணிகளையும், முஸ்லிம்கள் தங்களுக்கான அணிகளையும் உருவாக்கினர். குஜராத்தி, மராத்தி, தெலுங்கு போன்ற இனரீதியான அணிகளும் உருவாயின. ஆக, கிரிக்கெட் என்பதன் தொடக்கமே வகுப்புவாத தன்மை கொண்டதாக இருந்தது. இவர்களை அணிகளாக மோதவிடுவதன்மூலம் சமூகத்திற்குள் ஒரு வகுப்புப் பதற்றத்திற்கான மனநிலையை பிரித்தானிய காலனிய அரசாலும், மத அமைப்புகளாலும் கட்டமைக்க முடிந்தது.
இது 1930-ற்குப்பிறகு உச்சநிலையை அடைந்தது. இந்து அணி, பார்சி அணி, சீக்கிய அணி, முஸ்லிம் அணி, கிறித்துவ அணி என்பதாக பிரிந்து இந்து முஸ்லிம் மக்களிடையே இரு தேசக்கோட்பாடடிற்கு வலு சேர்ப்பதாக இந்திய வகுப்புவாத சக்திகளின் கருத்தியலுக்குள் ஆட்பட்டது.    இன்று இந்திய முதன்மை லீக் (IPL) ஆட்டத்தில் ஒரு அடிமை-வியபாரத்தைப் போல ஏலம் எடுக்கப்பட்ட ஆட்டக்காரர்களால் கலவையாக அமைக்கப்பட்ட சென்னை அணி, மும்பாய் அணி என்கிற பிராந்திய பெயர் கொண்ட அணிகள் எப்படி வெறும் பெயரைக் கொண்டே பிராந்திய வெறியை ஊட்டுகின்றனவோ அதைப்போல ஒவ்வொரு கிரிக்கெட் வெற்றிக்குப் பிறகும் வகுப்பவாத அணிகாளால் வகுப்பு பதற்றங்களை உருவாக்கி வகுப்புவாத உணர்வை ஆறாமல் காக்க முடிந்தது.  இன்னொருபுறம் இது ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை தேச அளவில் ஒருங்கிணைந்த அடையாளத்திற்குள் கொண்டு வந்ததுஇன்று இந்தியா ஆடும்போது எல்லோரும் இந்திய குடிமகன் என்கிற உணர்வு மீள்கட்டமைப்பு செய்யப்படுவதைப்போல, வகுப்பு ரீதியான அடையாளத்தை உருவாக்கி வகுப்பு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியதுஇது மத துருவமயமாதலுக்கு ஒரு காரணமாக அமைந்தது.
கிரிக்கெட்டை பிரித்தானிய ஏகாதிபத்தியம் அறிமுகப்படுத்தியதே குடியெறிகளுக்கும், குடிமக்களுக்கும் இடையில் ஒரு ஒற்றுமையை உருவாக்கவும், ஒரு கலப்பின அடையாளத்தை பேணவும்தான். இவ்வாறு ஒரு கலப்பின வர்க்கமாக இந்திய மத்திதர வர்க்கத்தின் தோற்றத்திற்கான ஒரு பண்பாட்டு அடையாளமாக கிரிக்கெட் இருந்தது. இன்று இந்த அடையாளம் மத்தியதரவர்க்கம் தாண்டி அடிமட்ட அளவிலான மக்களிடமும் இறக்கப்பட்டுள்ளது. ஒரு தேசிய உணர்வாக அறியப்படுகிறது. கிரிக்கெட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அது கனவான்களின் ஆட்டமாகத்தான் அறிமுகமானது. இந்திய மக்களை காலனிய குடிமக்களாக கட்டமைத்ததில் மெக்காலேயின் கல்விக்குப் பிறகு ஒரு கனிசமான பாத்திரத்தை கிரிக்கெட் ஆற்றியது. பிரித்தானிய ஏகாதிபத்தியம் தனது எல்லாக் காலனி நாடுகளிலும் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியதின் நோக்கம் காலனிய உடலை கட்டமைக்கும் ஒரு எந்திரமாக அது இருந்ததுதான். சான்றாக பிரித்தானிய காலனிய நாடான ஆஸ்திரேலியாவில்ஆங்கிலத்தனம்” (englishness) என்கிற ஒரு குணாம்சத்தை கிரிக்கெட்தான் கட்டமைத்தது. கிரிக்கெட் என்பது பிரித்தானிய காலனிய எஜமானர்களைப் 'போலச் செய்யும்' (mimic) ஒரு பண்பை காலனிய குடிமக்களிடம் உருவாக்கியது. அல்லது பிரித்தானிய பண்பாட்டை தனது காலனி நாடுகளில் விதைத்ததுகிரிக்கெட்டின் உடை அமைப்பு என்பது இந்திய உடையமைப்பில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
இன்றுவரை கிரிக்கெட் இந்த காலனிய சேவையை மிகச்சிறப்பாக செய்துவருவது கண்கூடுஇன்றைய கிரிக்கெட் ஆட்டத்திலும் காலனிய மேலாண்மை என்பது ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக உள்ளது.  சான்றாக, ஒரு பார்ப்பனக் குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவரும், இந்திய கிரிக்கெட்டை பரவலாக்கியவரும், உலக அளவில் பெயர் வாங்கி தந்தவருமான சுனில் கவாஸ்கர் இந்தியா இங்கிலாந்துடன் ஆடும்போது அவர்களுக்கு உயர்தரமான ஓய்வு அறையும், உணவுகளும், இந்தியர்களுக்கு மோசமான ஓய்வு அறையும், உணவுகளும் தந்த காலனிய எஜமான மணோபாவத்தை எதிர்த்து கேள்விக்கேட்டு இந்திய ஆட்டக்காரர்களுக்கு சம அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பது காலனிய மேலான்மை மனநிலையின் தற்கால நீட்சியையே காட்டுகிறது. காலனியத்தின் ஆதிக்க மணோபாவத்தை எதிர்த்து முதன்முதலாக குரல் எழுப்பியவர் என்ற பெருமை கவாஸ்கருக்கு உண்டு. அதேபோல் இந்தியா இங்கிலாந்து ஆடும் ஆட்டங்களில், இந்தியா பெறும் வெற்றியை இங்கிலாந்து மக்களால் ஏற்க முடியாத மனநிலை வெளிப்படுவதைக் காணலாம். காலனிய மேலான்மையின் எச்சமாக இன்றும் கிரிக்கெட்டில் நிலவிவரும் இந்த மனப்போக்கு கவனிக்கத்தக்கது.
கிரிக்கெட்டின் அடிப்படையே காலனிய ஆளும் தன்னிலைகளும், ஆளப்படும் தன்னிலைகளும் ஒருங்கிணைவதற்கான ஒரு புள்ளியை உருவாக்கி ஆளப்படும் தன்னிலைக்குள், ஆளும் தன்னிலையை உயர்ந்ததாக கட்டமைக்கும் படிநிலைப் பண்புதான். அது ஒரு சக்திவாய்ந்த ஒன்றினைக்கும் விசையாகவும், மேட்டிமையின் குறியீடாகவும் இருந்தது. இநதியாவை ஒரு தேசமாக கட்டமைக்கும் முக்கிய காரணியாக இன்று செயல்படுவது கிரிக்கெட்தான். இந்திய தேசியம் என்பது கிரிக்கெட்டின் ஆடுகளப் பரப்பு தவிர வெறொன்றுமில்லை. இந்திய உடல்கள் கிரிக்கெட்டை காண்பதன் மூலம் கலைப்பிரியர்களாகவும் பேசுவதன்மூலம் கனவான்களாகவும் குறியிடப்படுகிறது. ஒரு கிரிக்கெட் வரலாற்றாளர் கூறியதுபோல கிரிக்கெட் எல்லா வர்க்கப் பார்வையாளர்களையும்கலைப்பிரியரான கனவான்களாக குறியிட்டது.”  ("the mark of an amateur gentleman" from any class). அந்த கனவான்களின் ஒரு உச்சக்கட்ட கொண்டாட்டமே இன்றைய கிரிக்கெட்டில் வெளிப்படுகிறது.  
கிரிக்கெட் மிடில்-ஸ்டெம்ப் ஆண்குறி மற்றும் சாதிய மேலாண்மை - சில குறிப்புகள்.
“இந்திய விளையாட்டான கிரிக்கெட் விபத்தாக பிரிட்டனின் விளையாட்டாகிவிட்டது“ என்று கூறும் உளவியல் அறிஞரான அஸிஸ் நந்தி தனது பேட்டி ஒன்றில் இந்திய மக்கள் கிரிக்கெட்டை விரும்ப  3 காரணங்களை சுட்டிக் காட்டுகிறார். 1. முற்றிலும் நவீனமயமாகாத இந்தியாவில் கிரிக்கெட்டின் கொண்டாட்ட மனநிலை என்பது தொழிற்சமூகத்திற்கு முந்தைய அதாவது நவீன சமூகத்திற்கு முந்தைய மதிப்பீட்டைக் கொண்டதாக உள்ளது. 2. கிரிக்கெட் யாராலும் கட்டுப்படுத்த முடியாத பல்வேறு காரணிகளை, எண்ணற்ற மாறிலிகளையும் கொண்டுள்ளது. 3. எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டதாக உள்ளது. எண்ணற்ற மக்களால் கருத்து சொல்லக்கூடியதாக, அதாவது விதி அல்லது தலையெழுத்து போன்ற மர்மத்தன்மைக் கொண்டதாக உள்ளது. உண்மையில் கிரிக்கெட் விளையாடுபவர் எதிர் அணியுடன் விளையாடுவதில்லை தனது விதியுடன் அல்லது தலையெழுத்துடன்தான் விளையாடுகிறார் என்கிறார் நந்தி. இந்த காரணங்களின் அடிப்படையாக இருப்பது இந்திய மக்களின் கூட்டுமனநிலைக் கொண்டாட்டத்தை கிரிக்கெட் மீளுருவாக்கம் செய்வதே. பண்டைய நிலவுடமை மதிப்பீடுகளான விதி அல்லது தலையெழுத்துப் போன்ற எதிர்பாராதா நமக்கு வெளியே உள்ள சக்தியால் தீர்மாணிப்பது போன்ற ஒரு மர்மத்தன்மை இதில் நிலவுகிறது.   
அஸிஸ் நந்தியின் மேற்கண்ட கருத்து கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டாக நிகழ்ந்ததை சொல்கிறது. ஆனால்தற்காலத்தி்ல் கிரிக்கெட் விளையாட்டு என்கிற நிலையை தாண்டி ஆணாதிக்க தேசிய அரசியலை கட்டமைக்கும் ஒரு ஊடகப்-புனைவு வெளியால் ஆடப்படுகிறது.  90-களுக்கு பிறகு தொலைக்காட்சியால் கிரிக்கெட் கேட்கும் வெளியிலிருந்து (வாணொலியிலிருந்து) பார்க்கும் வெளிக்கு (தொலைக்காட்சிக்கு) மாற்றப்பட்டது. இம்மாற்றம் இந்திய அணி கபில்தேவ் தலைமையில் கோப்பையை வென்ற 1983-ல் துவங்கியது. 90-களுக்குப்பிறகு செயற்கைக்கோள் மற்றும் கேபிள் நெட்வொர்க் ஆகியவற்றால் இந்தியாவெங்கும் விரிக்கப்பட்டது,
சில வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட் ஒரு சூதாட்டம் என்று உலகமே அறிந்து பரப்பரப்பானது. சூதாட்டத்தின் முன் ஆடுபவரின் தேசபக்தி சுருண்டு படுத்து விட்டதுடன் பார்த்தவர்களின் தேசபக்தியும்கூட கேலிக்குட்படுத்தப்பட்டதாக உணரப்பட்டது. இந்த சூதாட்டம் என்பத கிரிக்கெட் தோன்றி ஒரு பார்வையாளர் ஆட்டமாக மாறிய1920-களிலேயே ஒரு கருப்புச் சந்தைக்கான பொருளாதாரத்தைக் கொண்டதாக மாறியது. அன்றே பந்தயம் மற்றும் அனுமதிச் சீட்டில் போலி அனுமதிச்சீட்டுகளை வழங்குதல் என்பதாக ஒரு சூதாட்டக்களமாக மாறியதுஅன்றே மரங்களில் ஏறியும், ஒரு சிறிய இடைவெளிக்கூட இல்லாமல் அமர்ந்தும் பார்க்கும் அளவிற்கு ஒரு வெகுமக்கள் விளையாட்டாக மாற்றப்பட்டதுகுறிப்பாக 90-களுக்குப் பிறகு இந்த ஆட்டம் பெரு வளர்சசிக் கண்டது. நகர மக்களின் பார்வைத் தளங்களிலிருந்து கிராம மக்களின் பார்வைத் தளத்திற்கு விரிவடைந்ததுஇன்று அது ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக வளர்ந்து விட்டது. உலகக் கோப்பைக் கிரிக்கெட் ஜீரம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரவி வந்தது. அதற்கு இடையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையாக20க்கு20 உலகக்கோப்பை நடத்தப்படுகிறது.
கிரிக்கெட்டில் உருவாக்கப்படும்தேசபக்தி“ போன்ற உணர்வுகள் உண்மையில் ஒருவகைதேசவெறி“-யையே கட்டமைக்கின்றன. இந்த தேசவெறி இன்றைய அரசியல் சூழலுக்கான தேவையை நிறைவு செய்கிறது. இன்னும் குறிப்பாகக் கூறினால் ஒருவன் தன்னை இந்தியனாக உணர்வதற்கான வெளியாக இது கட்டமைக்கப்பட்டுள்ளது. தேசபக்தி போர்க்காலச் சூழலிலேயே ஒரு குடிமகனுக்கு வெறியாக மாறும். கிரிக்கெட் என்பது ஒரு போராக அதிலும் தொலைக்காட்சி கட்டமைக்கும் ஊடகவெளியில் நிகழும் ஒன்றாக மாறி உள்ளது. உளவியல்ரீதியாக ஒரு போர்பதற்றமே இதனால் பரவலாக்கப்படுகிறது. அதனால்தான் இந்தியாவின் தோல்வியை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ளாது, தனது நாட்டை இழந்த ஒருவரின் கையறு மனநிலையாக குடிமகனின் மனம் பதற்றமடைகிறது. இவ்வாறாக, ஒரு எண்மவெளிப் போராக(digitalized war) மாற்றப்பட்டுள்ள கிரிக்கெட் என்கிற விளையாட்டை ஏன் இந்திய அரசும், ஊடகங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் பிரதானப்படுத்துகின்றன என்பதற்கு முன்வைக்கப்படும் ஒரே வாதம் கிரிக்கெட்டை எல்லோரும் பார்க்கிறார்கள் விரும்புகிறார்கள் என்பதுதான். இதனை கொஞ்சம் தெளிவுபடுத்தி்க் கொள்வோம்.
உண்மையில் எல்லோரும் பார்க்கிறார்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு எந்த புள்ளிவிபரங்களும் கிடையாது. பாப்புலராக உள்ளது என்பதன் பொருள் பெரும்பான்மையினர் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்பதல்ல. இது தகவல் தொழி்ல்நுட்பகாலம். இங்கு ஆதிக்கம் செய்வது தொலைக்காட்சி. பெர்ணாட்ஷாவின் புகழ் பெற்ற இந்த வாசகம் நமக்குத் தெரியும் '11 முட்டாளகள் விளையாடுவதை11,000 முட்டாள்கள் பார்க்கிறார்கள்.' அவர் இதோடு இனைந்து மற்றொன்றையும் சொன்னார். அது தொலைக்காட்சி என்பது'முட்டாள்கள் பெட்டி (இடியட் பாக்ஸ்idiot box)' என்பதுதான். தொலைக்காட்சிதான் கிரிக்கெட்டை பெரிய விளையாட்டாக மாற்றி அதன் விளையாட்டுத்தனத்தை எல்லாம் வியபார உத்தியாக்கி இதனை ஒரு அரசியல் சார்ந்ததாக கட்டமைத்துள்ளது. இக்கட்டமைப்பிற்கு அடிப்படையாக அமைந்தது அதன் சாதியச் சார்பு, பொருளாதார ஆதிக்கம், வெகுசன உளவியலில் ஆதிக்க கருத்தியலைக் கட்டமைத்தல் ஆகியனவாகும். கிரிக்கெட் துவங்கியதிலிருந்து இன்றுவரை ஆதிக்கம் செலுத்தும் சாதி பார்ப்பனர்கள்தான். இந்திய ஊடக உலகம் 80-சதவீதம் பார்ப்பனர்கள் மற்றும் உயர்சாதிகள் (அதாவது நவ பார்ப்பனர்கள்) கையில் உள்ளது. இதுவே கிரிக்கெட்டை இன்று ஒரு ஆதிக்க விளையாட்டாக கட்டமைத்துள்ளது.
மற்ற விளையாட்டுகளைப்போல உடற்பயிற்சிக்காக கிரிக்கெட் ஆடப்படுவதில்லை. கிரிக்கெட்டே ஒரு ஸாப்ட் கேம் (மென் விளையாட்டு) எனப் பெயர் பெற்றது. “கிரிக்கெட் உடலைத் தொட்டு விளையாடாத ஒரு விளையாட்டாகும் என்பதால் இத பார்ப்பனியர்களை கவரும் விளையாட்டாக உள்ளது. மேலும், இதற்கு மிகையான உடல் வலு அவசியமில்லைஎன்கிறார் இந்திய கிரிக்கெட் வரலாற்று ஆய்வாளரான ராமச்சந்திர குஹா.  ஆக, இந்திய சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள உடல் உழைப்பற்ற உயர்சாதிகள் எப்படி பெரும்பான்மையாக உள்ள பிறர்மீது அதிகாரத்தை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துகிறார்களோ அது அப்படியே கிரிக்கெட் அணியிலும் அதைவிட கூடுதலாக பிரதிபலிக்கிறது. இங்கு எழும் கேள்வி விளையாட்டை சாதி அடிப்படையில் பார்க்கலாமா? திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதுவே விளையாட்டுக்குத் தேவை? என்பதுவே. இதில்'திறமை' என்கிற வழக்கமாக பயன்படுத்தப்படும் பார்ப்பன மற்றும் உயர்சாதி மேலாதிக்க கருத்தியலே செயல்படுகிறது. மற்ற விளையாட்டுகளில் திறமையானவர்கள் இருந்தாலும் அது கிரிக்கெட்டின் அளவிற்கு பிரபலமானதாக இல்லை. அதற்கு அரசும் எந்தவித முக்கியத்துவம் தந்து ஊக்கப்படுத்தி முன்னேற்றுவதும் இல்லை. இந்த 'திறமை' என்பது ஒரு சார்பியலான கருத்தாக்கமே. மேலும் இது சமூக மதிப்பீட்டின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறது. தவிரவும்'திறமை'-யானவர்கள் கண்டடைவதற்கான முயற்சிகள் கிரிக்கெட்டில் கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்று வருவதன் விளைவுதான் இன்றுவரை அணியின் பெரும்பான்மையினர் ஒரு குறிப்பிட்ட சாதியை அதுவும் பார்ப்பன மற்றம் உயர்சாதியை சேர்ந்தவராகவுமே இருக்கின்றனர்.
கிரிக்கெட் என்கிற விளையாட்டு அமைப்பே இந்தவகை உயர்சாதியின் 'திறமை' என்கிற கருத்தியல் ஆதிக்கத்திற்குள் சிக்கியிருப்பதையே இது காட்டுகிறது. இங்கு அசாருதீன் மற்றும் கபில்தேவ் போன்ற சிலரை சுட்டிக்காட்டக்கூடும். இவை ஒரு தவிர்க்க இயலா நிகழ்வுகளாக விதிவிலக்காக அமைந்தவையே. பெரும்பான்மை இன்றும்கூட உயர்சாதி மற்றும் பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில் இருப்பதையே பார்க்கிறோம். இது ஒருபுறம் இருக்க கிரிக்கெட் என்கிற ஆட்டம் மற்றும் அதன் அடிப்படையில் இயங்கும் கோட்பாடு் இன்று அது இந்திய மக்களை ஆட்கொண்டிருக்கும்விதம் ஆகியவையே இங்கு நாம் அவதானிக்க வேண்டியதாக உள்ளது.
கிரிக்கெட் விளையாட்டு என்கிற நிலை கடந்துவிட்டது அது ஒரு காட்சிகாண் மகிழ்வின் அரசியலாக மாறிவிட்டது. அதன் அடிப்படை இன்று மக்களை மந்தைகளாக மாற்றுவதுதான். இல்லாவிட்டால் சிறப்பு யாகம், பூஜை செய்வதும், தீக்குளிப்பதும்,  'ஹார்ட் அட்டாக்'- வந்து சாவதும் எதனால்? தோல்லி அடைந்தால் கிரிகெட் விளையாடுபவர்களின் வீட்டை அடிப்பதும், வெற்றி பெற்றால் யானை மீதேறி கொண்டாடுவதும் எதனால்? சமூக நலலிணக்கத்திற்காக பாடுபடும் லலிதா ராமதாஸ் என்பரால் சுட்டிக்காட்டப்டும் கருத்தாக்கம் கிரிக்கெட்டின் அரசியலை நமக்கு அம்பலுப்படுத்துவதாக உள்ளது.  2003-ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மார்ச், 1 2003-ல் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆட இருந்ததுபிப்ரவரி 27- 2003-ல் கோத்ரா ரயில் எரிப்பும் அதை ஒட்டிய கலவரமும் நடந்து ஒராண்டுகிறதுஇறந்துபோன அப்பாவி முஸ்லிம்கள் பற்றியோ அவர்களது இறப்பு பற்றியோ எந்த பத்திரிக்கையும் எழுதவில்லை, அதற்கு பதிலாக குஜராத் தினசரி ஒன்று நாளை நடக்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் விளையாடும் இந்திய வீரர்கள் கையில் மட்டைக்குப் பதிலாக கலாஷ்னிகோவ் துப்பாக்கியுடன் பாகிஸ்தான் வீரர்களை எதிர்கொள்வது போன்ற கனிப்பொறியில் வடிவமைக்கப்பட்ட படத்தை வெளியிட்டு மத மற்றும் தேச வெறியை தூண்டுகிறது. இதுதான் ஊடகங்கள் கிரிக்கெட்டை முன்வைத்து நடத்த விரும்பும் அரசியல்.
இது ஒருவகை பைத்திய நிலைக்கு மக்களை ஆழ்த்துகிறது. இதனால் பிற விளையாட்டுகள் வளர்ச்சியற்றதாக மாறி உள்ளன. சமீபத்தில் உலக அளவில் ஒரு பொட்டியில் வெற்றி பெற்ற இந்திய ஹாக்கி அணி அரசால் கண்டு கொள்ளப்படவில்லை என்பதால் அனைவரும் உண்ணாவிரதம் இருந்தனர். அதன்பின் அரசு அவர்களுக்கு சில உதவிகளை செய்தது. நாளையே மீடியாக்கள் கிரிகெட்டிற்கு பதிலாக கில்லியை தொடர்ந்து காட்டத் துவங்கினால் அதையும் வாயைப் பிளந்த பார்த்துவிட்டு.. இப்படித்தான் அதன் கட்டமைப்பு விதியால் வெறி கொண்டு திரிவோம். ஆக, இன்று மீடியாக்கள்தான் உண்மைகளை உருவாக்கி மக்களை அதில் மூழ்கடித்துக் கொண்டுள்ளன. 20 வருடங்களுக்கு முன்பாக கிரிகெட் இத்தனை பிரபலம் அடையவில்லையே ஏன்? காரணம், தொலைக்காட்சிகள் இந்த அளவிற்கு பரவலாக ஆகவில்லை. இலவச பாடபுத்தகங்களுக்கு சமமாக இலவச தொலைக்காட்சிகள் தரும் நிலைக்கு அரசானது இன்று தள்ளப்பட்டிருக்கிறது என்றால் தொலைக்காட்சியின் ஆதிக்கத்தை உணரலாம். தொலைக்காட்சிகள் இன்றைய சராசரி வாழ்வை மாற்றி அதனால் முன்வைக்கப்படும் ஒளிர்திரை வாழ்விற்கு சமூகத்தை தள்ளி உள்ளது. எது உண்மை? எது பொய்? என்பதெல்லாம் அவற்றால்தான் கட்டமைக்கப் படுகிறது.
கிரிகெட் கடந்த 20 ஆண்டுகாலமாக இப்படித்தான் ஒரு இந்திய மக்களின் பார்வையின்ப விளையாட்டாகவும், ஒரு உலக விளையாட்டாகவும் மாற்றப்பட்டுள்ளது. இன்றும்கூட உலகை ஆளும் விளயாட்டு அல்லது உலக நாடுகள் அதிகம் பங்கு பெற்றுள்ள விளையாட்டு கால்பந்துதான். கிரிகெட் ஒரு உலக விளையாட்டு என்பதும் உலக கோப்பைக்கான விளையாட்டு என்பதும் நமது எண்ணிக்கை சார்ந்த 'அதிக' நாடுகள் கணக்கின்படி உலக விளையாட்டே அல்ல. எண்ணிக்கையில் அதிகமாக பார்க்ப்படுவதும்கூட கால்பந்துதான். இருப்பினும் மினி தொடங்கி மெகாவரை பல உலகக்கோப்பைக்கான ஆட்டங்கள் கிரிக்கெட்டில் நடத்துப்படுகிறது.
கிரிக்கெட் இன்று ஒரு சின்ன இடம் கிடைத்தால்கூட கற்பனையாக ஆடுகளனை உருவாக்கி விளையாடப்படும் ஒன்றாக மாறி உள்ளது. பள்ளிகளில் துவங்கி தெருக்கள் ஏன் சிறிய திண்ணைகளில்கூட விளையாடப்படுகிறது. இங்கு பரவலாக கிரிக்கெட்டை மக்கள் விரும்பி ஏற்க காரணம் என்ன? என்பது குறித்து கிரிக்கெட்டை பிராய்டிய உளவியலில் ஆய்வு செய்த ஆய்வாளர் தி.கு. இரவிச்சந்திரன் சில விளக்கங்களை அளிக்கிறார். பிராய்டிய உளவியல் என்பது இன்றைய அதிகார அமைப்புகளுக்கான ஆதிக்க தன்னிலையை கட்டமைப்பதற்கான தொழில்நுட்ப சொல்லாடலாக மாறியுள்ளது மற்றும் அதன் ஓடிபல் உறவு குறித்த சொல்லாடல் இன்று விமர்சனத்திற்கு உள்ளாக்கப் பட்டுள்ளது என்றபோதிலும் கிரிக்கெட்டுடன் தொடர்புடைய ஆர்வமூட்டும் அவரது கருத்துக்களை இங்கு தருகிறேன்.
அதாவது 'கிரிக்கெட் எட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் நடந்து வந்த ஒருவகை மட்டைப்-பந்து விளையாட்டு கடல்கடந்து பிராண்ஸ் வழியாக இங்கிலாந்தை அடைந்திருக்கலாம். காரணம் cricket என்பது பிரஞ்சு சொல்லானcriquet என்பதன் திரிபாகும். டச்சுமொழியில் குச்சியைkrick என்றும் பழைய ஆங்கிலத்தில் குச்சியை Cricc என்ற சொல்லால் குறிப்பது வழக்கம். இதன் மற்றொரு பரிணாமம் ”கில்லி-தண்டா” எனப்படும் இந்திய நாட்டுப்புற விளையாட்டிற்கும் கிரிக்கெட்டிற்கும் உள்ள ஒற்றுமை. இந்த ஒற்றுமையே எளிமையாக இவ்விளையாட்டு இந்திய மக்களால் புரிந்து அதிலும் கிராம அளவில் உள்ளவர்கள் வரை ஏற்றுக்கொள்ள ஒரு காரணம் ஆகும். கிரிக்கெட் ஆணிலை பார்வையின்ப அடிப்படையிலான ஒரு ஆண்மைய விளையாட்டு என்பது மற்றோரு முக்கிய காரணமாகும். அதில் குச்சியை காத்தல் என்பது ஆண்குறியை காப்பது என்கிற காயடிப்புச் சிக்கலுடன் உறவு கொண்டது. காயடிப்பு சிக்கல் என்கிற பிராய்டிய கருத்தாக்கத்தின்படி ஆண் குழந்தையானது பெண் குழந்தையுடன் தன்னை ஒப்பிட்டு தனக்கு ஆண்குறி இருப்பதையும் பெண்ணிற்கு அது இல்லாமல் இருப்பதையும் வித்தியாசப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்நிலையில் தனது ஆண்குறியும் கண்டிக்கப்படலாம் என்கிற பதற்றத்திற்கு ஆளாகிறது. இப்பதற்றத்தால் தனது ஆண்குறியை தந்தையிடமிருந்து காக்க சமூக விதிகளை ஏற்று பெரியவர்களின் விதிமுறைகளை எதிர்க்காமல் பின்பற்றும் மனநிலையை அடைகிறது. தனக்கு உள்ள ஆண்குறி பெண்ணிற்கு இல்லை என்பதால் தான் பெண்ணைவிட உயர்ந்தவனான ஒரு ஆழ்மனப் படிமம் வந்துவிடுகிறது. இதன் விளைவே பெண்ணை இரண்டாம் இடத்தில் தனக்கு கீழாக வைத்து கானும் நிலையாகும். மேலே சொன்ன இந்த ஆணகுறியை இழந்துவிடக் கூடிய பதற்றமே காயடிப்புச் சிக்கல் எனப்படுகிறது.
கிரிக்கெட்டில் உள்ள ஸ்டெம்ப் என்கிற குச்சி இங்கு ஆட்டக்காரனின் ஆண்குறி மையமாக செயல்படுகிறது. இக்குச்சியை இழத்தல் என்பதே ஆட்டமிழப்பு அதாவது ஆட்டக்காரனின் இருப்பின்மையை உருவாக்குகிறது. குச்சிதான் அவனது இருப்பு. இது ஒரு லிங்கமையவாத (அதாவது ஆண்குறிமையவாத) ஆழ்மனக் கட்டமைப்பாகும். குச்சியைக் காத்தல் என்பதே ஆட்டத்தின் பிரதான விதியாகும். இவ்வாறாக குச்சியை இழந்து ஆட்டமிழப்பது என்பது மற்ற ஆட்ட இழப்பைவிட ஒரு அவமானகரமான ஒன்றாக கருதப்படுவதும் இதனால்தான். குச்சியை இழப்பதனால் ஆட்டக்காரன் ஒரு பெண்ணாக மாற்றப்படுகிறான். இங்கு ஆண்மை தோல்வியடைகிறது. இதே நிலைதான் பார்வையார்களின் உணர்வு நிலையும். கிரிகெட்டை பார்ப்பது என்பது தனது ஆண்மையை நிரூபித்துக் கொள்ளும் ஒரு உளவியல் செயல்பாடாக அடையாளம் காணப்படுவதால்தான் வெகுமக்கள் அதன்மீது தீவிர ஈடுபாடு காட்டுகின்றனர். தனது ஆண்மை தோற்கடிக்கப்பட்டால் அவர்களுக்கு ஏற்படும் வருத்தம் எதிரியை தாக்கும் மூர்க்கமாக வெளிப்படுகிறது. கிரிக்கெட் தோல்வி ஆட்டக்காரர்கள் மீதான் தாக்குதலாக மாறுவதற்கு இதுவே காரணம். இரு நாடுகளுக்கிடையில் நடைபெறும் போட்டி என்பது ஒரு உயர்வகைப்படத்தப்பட்ட போராக நிகழ்கிறது. (விரிவாக இவ்வாய்வை படிக்க ஃப்ராய்ட் யூங் லக்கான் -அறிமுகமும் நெறிமுகமும்- தி.கு. இரவிச்சந்திரன் நூலைப்பார்க்கவும்.)
கிரிக்கெட் விளம்பரங்களால் காசை அள்ளித்தரும் ஒன்று. அதனால் அதன் பிரபல்யத்திற்காக எதுவும் செய்யப்படும். இதில் இரண்டு பிரச்சனைகள் உள்ளது. ஒன்று இதில் புரளும் பொருளாதாரம். மற்றொன்று.. இதன்மூலம் மக்களை சிந்திக்கிவிடாமல் தொடர்ந்து போதையில் ஆழ்த்துவது. மக்களின் பேச்சுக் களத்தை இதை சுற்றியே பின்னுவதுஅப்படி பின்னுவதால் அணு ஒப்பந்தமோ அல்லது மக்களுக்கு எதிரான சட்டங்களோ பேசுப் பொருளாக மாறாது. இன்று மக்கள் எதை சிந்திக்க வேண்டும்? எதை பேச வேண்டும? எப்படி படுக்க வேண்டும்? எப்படி சிரிக்க வேண்டும்? எதற்கு சிரிக்க வேண்டும்? இப்படியாக எல்லாக் கூறுகளையும் இந்த ஊடகங்கள்தான் கட்டமைத்து தந்துள்ளன. சுருக்கமாக மக்களுக்கான தினவாழ்வை(daily life) இவைதான் தீர்மாணிக்கின்றன. அதனால் இன்று ஊடகங்கள் யாரிடம் இருக்கிறதோ அவர்களது கருத்தியலே ஆதிக்க கருத்தியலாக உள்ளது. 80-சதவீத ஊடகங்கள் யார் கையில் உள்ளது என்பது சொல்லவே வேணடியதில்லை. உயர்சாதி மற்றும் பார்ப்பனர்கள் கையில்தான் உள்ளது அல்லது உயர்சாதிய கருத்தியலில் வழி நடத்தப் படுகிறது
இது மக்களிடம் உள்ள மலர்ச்சியான பண்புகளை சாகடிக்கும் ஒன்றாக உள்ளது. விளையாட்டின் விதி வெற்றிக்கான உந்துதலே தவிர வெற்றியடைந்தே தீர்வேன் என்கிற வெறி அல்ல. காரணம் வெற்றி என்பது ஏற்படுத்தும் மகிழ்வு என்பது மதிப்பு மிக்கதாக கட்டமைக்கப்பட்ட சமூக விதியால் வருவதேஒன்றை வெல்லுதல் அல்லது வெற்றிக்கொள்ளுதல் என்பதும், அது ஏற்படுத்தும் பரவசமும் ஒரு ஆதிக்கச் சொல்லாடல் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. வெற்றி என்பதை எப்படி அளவிடுவது? தனக்கு மகிழ்வை தராத வெற்றியின் பொருள் என்ன? கிரிகெட்டில் கிடைக்கும் வெற்றி என்பது எது? அது யாருக்கு சாதகாமானது? அதில் யார் பயனடைகிறார்கள்? அதுதரும் மகழ்வின் எச்சமாக நமது மன அமைப்பில் கட்டப்படும் அரசியல் எது? என்கிற கேள்விகள் எஞ்சியுள்ளன. பிரச்சனை வெற்றி என்பதை மையமாகக் கொண்ட  செயல்கள்தான் மனிதனின் அடிப்படை வன்முறைக்கு காரணம். வெற்றி என்பது விரைப்புநிலை உணர்வு. இந்த உணர்வை பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய கிரிகெட் ஆட்டமும். சவுத் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாவே மற்றும் கென்யா ஆகியோரின் ஆட்டங்களில் காணலாம். இவற்றில் நிறவெறி மதவெறி போன்றவை ஒரு நுண்ணரசியலாக செயல்படுகிறது என்பது அறிந்ததே. கிரிக்கெட் ஆடப்படும் களத்தை தாண்டி சமூகப் பரப்பிற்குள் நுழைந்து மக்களின் மனப் பரப்புகளில் ஆட்டத்தை தொடர்ந்து, இன்று தேசத்தை தனது ஆண்மைய ஆடுகளப் பரப்பிற்குள் சுருக்கி வைத்துள்ளது என்றால் மிகையாகாது.
- ஜமாலன் (13-05-2008)  - jamalan.tamil@gmail.com (தீராநதியில் வெளிவந்த கட்டுரை) - புலம் பதிப்பகம் வெளியிட்ட எனது ’நவீனத் தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்’ என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: ஆண்குறி, தந்தை, காயடிப்பச்சிக்கல் போன்றவை உளவியல்ரீதியான குறியீட்டு அடிப்படையிலான கருத்தாக்கங்களே. அது பெளதீகரீதியான ஆண்குறியையோ நபர்களையோ குறிப்பது அல்ல.
உதவிய கட்டுரைகள்.
1. Tales of Cricket - Asis Nandy - Interview - http://catalogue.ausport.gov.au
2. Cricket's home moves closer to the money - By Raja M - http://www.atimes.com
3. Bowling for Democracy - by Orlando Patterson and Jason Kaufman - The New York Times - May1, 2005.
4. Cricket And Politics In Colonial India - Ramachndra Guha - 1998-Oxford Univercity Press.
5. The Politics of Cricket and  Some Reflections - by Lalita Ramdos - http://www.sacw.net/2002/lramdasmarch03.html
6. ஃப்ராய்ட் யூங் லக்கான் -அறிமுகமும் நெறிமுகமும் - தி.கு. இரவிச்சந்திரன்.-
7.China plans to take on the world at the 'noble game' of cricket - David Eimer-Independent Newspapers.             

சினிமா: 18 -. ’பியாட்டா’ : உடலின் பொருளியல் பிம்பம்

கிம் கி-டுக்கின் 18வது சினிமா பியாட்டா (2012). பியாட்டா என்றால் இத்தாலிய மொழியில் கருணை என்று பொருள். கன்னிமேரி இறந்த யேசுவின் உடலை தனது மடியில் கிடத்தியுள்ள புகழ்பெற்ற மைக்கல் ஆஞ்சலோவின் ஓவியத்தின் பெயர் பியாட்டா. மதங்களின் கருணை முதலாளித்துவத்தின் உச்ச வளர்ச்சியில் முற்றிலுமாக பணஉறவாக மாறிவிட்ட நிலையில் அதன் வடிவம் பலிவாங்குதலாக கொலையாக மாறி உள்ளதை காட்சிப்படுத்துவதே கிம் கி-டுக்கின் பியாட்டா. வன்முறை, பாலியல் என்ற தனது வழக்கமான உடல் மொழியில் உலகமயமாதல் உருவாக்கியுள்ள பொருளியல் நெருக்கடியில் மனித உடலும் உறுப்புகளும் பணத்திற்குள் சிக்கி சிதைந்து ஊனமாகிப்போகும் உடல்கள் பற்றியதாக வெளிவந்து உள்ளது இத்திரைப்படம்.

உலகமயமாதல் உருவாக்கி உள்ள எல்லா மனிதர்களும் கடன்காரர்களாக வட்டி மூலதனத்தில் சிக்குண்டவர்களாக ஆக்கப்பட்டு சிறுதொழில்களை, தொழில் பட்டறைகளை  நம்பி உள்ள மனிதர்கள் தங்கள் உறுப்புகளை விற்றுப் பிழைக்கும் நிலை எப்படி சட்டரீதியாக முதலாளித்துவத்தின் காப்பீட்டு கழகங்கள் வழியாக நடந்தேறுகிறது என்பதையே தனது மொழியில் வெளிப்படுத்தி உள்ளார் கிம் கி-டுக். வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் லைன் விருதுபெற்றது இத்திரைப்படம். வெனிஸ், கான்ஸ், பெர்லின் திரைப்பட விழாக்களில் பரிசுபெற்ற ஒரே தென்கொரியப்படம். பல திரைப்பட விழாக்களில் விருதுபெற்ற இத்திரைப்படம் சிறந்த அயல்மொழிப்படத்திற்கான 2013 ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

அமேரிக்க லேமேன் வங்கி வீழ்ந்ததை ஒட்டி உலகெங்கிலும் பொருளாதார நெருக்கடி வெளிப்படத் துவங்கியது. அமேரிக்காவில் வங்கிக் கடனாளிகளாகிப் போனவர்கள் தங்கள் சொத்துக்களை இழந்து நடுவீதிக்கு வந்தனர். பொருளாதார வீழ்ச்சி அரபு புரட்சி துவங்கி வால்ஸ்டீரீட் போராட்டம் வரை புயலாக வீசியது. அதற்கு அடிப்படையாக அமைந்த காப்பீட்டுக்கழகங்களின் வலைப்பின்னலுக்குள் மனித உடல்கள் சிக்கிக்கொண்டு எப்படி வட்டி மூலதனத்திற்குள் தங்கள் உறுப்புகளை இழக்கிறது என்பதும் பணம் என்றால் என்ன? கருணை ஏன் பணத்தால் முற்றிலுமாக குரூர மனப்படிவாக மாறியது என்கிற கேள்விகளை எழுப்புவதே பியாட்டா. இது மூன்றாம் உலக நாடுகளில் இன்னும் ஒருசில வருடங்களில் நடைப்பெறப்போகும் அவலத்தை முன் அனுமானித்து வெளிவந்து உள்ள திரைப்படம். தொடரும் உலகமயமாதல் மொத்த சமூகத்தையும் ஊனமுற்ற சமூகமாக வாழ வழியற்ற சமூகமாக மாற்றிவிடும் எந்திரவியலை தனது அழகியலோடு சொல்ல முனைகிறது.

இரண்டு அடுக்குகளில் இயங்குகிறது இத்திரைப்படம். ஒன்று பணம் ஒன்றே குறி என்று குற்றங்களை செய்ய வைக்கும் அரசியல்பொருளாதார அடுக்கு. அந்த குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட்டு கருணை, பாசம், அன்பு என்று இடிபலாக்கம் என்கிற தாய்-மகன் என்கிற லிபிடனல் பொருளியலின் அலகான குடும்ப அமைப்பாக  முனையும் சமூகஉளவியல்சார்ந்த அடுக்கு. முதலாளித்துவம் குற்ற உணர்ச்சியின் உளவியல் வடிவமாக உருவாக்கி வைத்துள்ள இடிபல்-சிக்கல் என்கிற தாய்-மகன் உறவும், அதன் நீட்சியாக நடைபெறும் கொலையும் என்பதாக தற்கொலையில் துவங்கி கொலையில் முடிகிறது.
கருணையற்ற இளைஞனான லீ காங்-டு (லீ ஜங்-ஜின்) சுயுமைதூனம் செய்துகொள்ளக் கூடிய குடும்பம் என்கிற நிறுவனமற்ற தனியன். அவனது தொழில் கடன் தந்த நிறுவனத்திற்கு கடனை வசூலித்து தருவது. ஒன்றுக்கு பத்து மடங்கு வட்டி என்பதால் கடன் வாங்கிய யாரும், அதனை அடைக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஒப்பந்தப்படி அவர்களது உடல் உறுப்புகளை சிதைத்து காப்பீட்டுக்கழகத்தில் பெறும் ஈட்டுத்தொகையில் கடனை ஈடுசெய்து கொள்வதற்காக, கடன்பெற்றவர்களின் உடல் உறுப்பை சிதைத்து கடனை வசூல் செய்கிறான். இப்படி தங்களது கடன்தொகைக்காக, பணத்திற்காக உடல் ஊனமுற்று அதனால் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

விவசாயம் அழிந்து அதனால் கடன்சுமை அதிகரித்து தற்கொலைசெய்துகொள்ளும் இந்திய விவசாயிகளின் நிலையைப்போல ஆகிவிடும் அந்த ஊனமுற்றவர்கள், இவன் கொடூரமான சாவை அடைவான் என்று சபிக்கிறார்கள். இன்றைய பொருளியல் வளர்ச்சி என்பது எப்படி வாழ முடியாத நிலைக்கு தள்ளுகிறது என்பதை வெளிப்படுத்தும் குறியீட்டு நிகழ்வுகளாக தொடர்ந்து உறுப்பு சிதைத்தல் நிகழ்கிறது. மகிழ்ச்சியான வாழ்விற்கு வீட்டுக்கடன் வசதிகள் என்கிற ஒரு விளம்பர அட்டையை இடையில் காட்டிச்செல்லும் காட்சியின்மூலம், வங்கிகள் வழியாக கடன் பெற்று மகிழ்ச்சியை அனுபவிக்கத் தூண்டும் நுகர்வு வெறியின் மற்றொரு பக்கம் ஊனமுற்ற வாழ்வாக மாறி உள்ளதை விவரிப்பதாக உள்ளது. கடன் அட்டைகளின் பின் நிகழும் வட்டி அதிகரிப்பும், அதனால் கட்டமுடியாத நிலையில் நிகழும் ரௌடியிசக் கொடூரங்களும் பதிவாகி உள்ளது இத்திரைப்படத்தில்.

முதல்காட்சியில் ஒருவன் ஊனமுற்ற கால்களுடன் தற்கொலை செய்துகொள்கிறான். ஒரு பெண்ணின் அலறும் குரலுடன் துவங்குகிறது.  அடுத்த காட்சியில் சுயமைதூனம் செய்துகொள்ளும் நாயகனின் இறுக்கமான முகத்தோடு ஒரு இரும்பு பட்டறை உள்ளவனிடம் கடனை வசூலிக்க வருவதாக போன் செய்வதுடன் தொடர்கிறது. அந்த பட்டறையாளன் பயத்தில் அலறியபடி கதவை சாத்திவிட்டு தன்னோடு பணிபுரியும் தனது மனைவியை மிகவேகமாக புணர்கிறான். இந்த நெருக்கடியான அவலத்தில் உனக்கு இது கேட்கிறதா? என்கிறாள் அவள். அதற்கு அவன் எனக்கு இப்போது உள்ள பதற்றத்தில் இது தேவையாக உள்ளது என்கிறான். புணர்ச்சி என்பது உடலின்பம் என்பதை தாண்டிய ஒரு உணர்வுத் தணிப்பானாக மாறிவிட்டதை பதிவு செய்யும் காட்சி.

முதலாளியம் உடலுக்குள் முதலீடு செய்துள்ள பாலுந்த பொருளியில் இதுதான். ஒருவகை கிளர்ச்சியை ஊட்டி நுகர வைப்பதும், பிறகு உணர்வுத்தணிப்பானாக பாலியலை வடிகாலாக்குவதும். கடனை வசூலிக்க வந்தவனிடம் அந்த பெண் தனது உடைகளை களைந்துவிட்டு நிற்பாள். கடனிற்காக உடலை விற்க தயார் என்றாலும், பணத்தை பெறுவதில் குறியாக உள்ளவன், அதை நிராகரித்து விடுகிறான். பெண் உடல் என்பது பணமதிப்பின் முன்பு, உடல் இன்பம் சார்ந்த விழைச்சுகள் அற்றதாக மாறியுள்ளதை பிம்பமாக்கும் ஒரு காட்சி. குடும்ப வெளிக்கு வெளியே பெண் உடல் தாசியாகி, போர் எந்திரங்களால் வேட்கை தணிப்பு உடல்களாகி, முதலாளியத்தில் பாலியல் தொழிலாளர்களாகி பண மதிப்பு பெற்றதை, உலகமயமாதலின் பணவெறியில் பொருளற்றதாக மாறிவிடுவதை வெளிப்படுத்துகிறது. உடலின்ப விழைச்சு என்பது மெய்நிகர் உலகில் வெறும் தொடுதிரை உணர்வுகளாகி விட்டதின் எதிர்விளைவே, சுயமைதூனம் செய்பவன் மெய்யுலகில் வரும் பெண் உடலை நிராகிரிக்கிறான் என்பதாக இதை காட்சிப்படுத்திக் கொள்ள முடிகிறது. 

கடன் பெற்றவனின் விரல்களை எந்திரத்தில் வைத்து துண்டித்து காப்பீட்டு கழகத்தின் ஈட்டுத்தொகையை பெற்றுவிடுவான் நாயகன். இதில் பெண்உடல், உறுப்பின் சிதைவு, எல்லாம் பணத்தின் பதலீடாக மாறிவிடுகிறது. புணர்ச்சி என்பது இந்த வட்டிமூலதன சுழற்சியில் வெறும் எந்திரங்களின் உணர்வுத் தணிப்பானாக மாறிவிடுகிறது. உடல்சார்ந்த கலவி உணர்வு தணிக்கும் புணர்ச்சியாகிவிடுகிறது இன்றைய சமூகத்தில். இங்கு மனிதன் இல்லை. பணத்தின் உள்ளீட்டில் வெறும் நுகரும் காகித வடிவமாக மாறிவிடுகிறான்.

காரணம் இன்பம், உணர்வு போன்றவை இல்லாத ஒரு எந்திரமாகவே மாறிவிட்டவன் அவன். முதலாளியப் பரோனியாவின் உச்சமான உலகமயமாதலில் உருவான மனித நிலையிது. அதாவது, மனிதன் ஒரு மனித-எந்திரமாக ரோபோவாக மாறிவிட்ட நிலை. மனிதநேயம் என்பதை தாண்டிய ஒரு எந்திரவியல் இயக்க நிலை. பியாட்டாவில் நாயகன் பாத்திரம் மிக நுட்பமாக அந்த எந்திர மனிதனாக பிம்பப் படுத்தப்பட்டு உள்ளது. எந்திரங்களால் எந்திரங்கள் கொண்டு ஆளப்படும் ஒரு உலகாக மாறிவரும் மூன்றாம் உலகே இதன் களம்.
முதல் பாதியில் காட்டப்படும் பல காட்சிகள் மனித எந்திரம் என்பது முதலாளிய மனப்பிறழ்ச்சியில் இயங்கும் பணத்தின் விழைச்சில் இன்பம் கண்டுவிட்ட ஒன்றாக இருப்பதையே குறியீடாகக் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளன. மனித உறவுகள் அவற்றின் உணர்வெழுச்சிகள் அன்பு பாசம் காதல் எதுவும் இல்லாதவனாக கட்டமைக்கப்பட்டு உள்ளான் நாயகன். முதல் 45 நிமிடங்கள் மேற்கத்திய பார்வையாளர்களால் காணமுடியாமல் முகச்சுழிப்பையும் அதிர்ச்சியையும் உருவாக்கியவை என்கின்றன பல விமர்சனங்கள். காரணம், தனது உள்ளிருத்தப்பட்டுள்ள பிறழ்ச்சியை திரையில் வெளிப்படுத்தும்போது ஏற்படும் அசூசையே அது. அதாவது, தனக்குள் உள்ள பிறழ்ச்சி திரையில் வெளிப்படுவதால் ஏற்படும் ஒருவித முகச்சுழிப்பு.

இச்சினிமாவின் இரண்டாவது அடுக்கில் ஒரு பெண் ஜங் மி-ஸன் (ஜோ மின்-சூ) அவனை தொடர்வாள். அவனுக்கு ஏன் அவள் தன்னை தொடர்கிறாள் என்பது புரியாத நிலையில் அவளை துரத்தியடிக்கிறான். அவளோ அவனை தன்னால் சிறுவயதில் கைவிடப்பட்ட மகனாகவும், தான் மீண்டும் அவனோடு இணைந்து வாழவும் விரும்புவதாக சொல்லி அவனை தொடர்கிறாள். அவள் தனது தாய் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை ஏற்க முடியாது என்கிறான். தாய்-மகன் என்கிற உறவிற்கு எதை ஆதாரப்படுத்த முடியும். அதற்கு அவன் தனது உடலில் உள்ள ஒரு அடையாளத்தை சொல்லும்படி கூற, அவள் சிறுவயதில் பிரிந்ததால் தெரியாது எனக்கூற, தனது தொடையில் உள்ள அந்த அடையாளப் பகுதியை அறுத்து அவளை தின்னும்படி சொல்வான். அவள் அதை தின்பாள். அடுத்த காட்சியில் அவளது குறியில் தனது கைகளை நுழைத்து, இங்கிருந்துதானே வந்தேன் இதற்குள்ளேயே போய்விடுகிறேன் என்று, அவளை சித்ரவதை செய்வான், அவளை பாலியல் பலவந்தம் செய்து புணர்வான்.

இங்கு இடிபல் என்கிற மர்மமாக, தெரியாமல், யதேச்சையாக நடந்த ஆழ்மனதில் தங்கிவிட்டதாக சொல்லப்பட்ட ஒன்று, தாயை அடையாளம் காணும் செயலாக தெரிந்தே நடப்பதாக காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குநர். புணர்ச்சிக்கு வழிகொடுப்பதன் மூலம் அவள் தயாகிறாள். இடிபல் என்ற கருத்து இங்கு உண்மையாக செயல்படுத்தப்படுகிறது தாயை அடையாளம் காணும் செயலாக. அதாவது தாய் என்ற உறவின் கருத்தியல் அடிப்படையை இடிபல் சிக்கலின் அடையாளமாக மாற்றிய முதலாளிய உளவியல் சிந்தனை [1]பற்றிய ஒரு விமர்சனமாகக் கொள்ளலாம். முதலாளித்துவத்தின் உளவியல் கட்டமைப்பில் முக்கிய பங்களிப்பை செய்த இடிபலாக்க செயல் இங்கு ஒருவிதமான அடையாளம் காணும் குரூரமாக வெளிப்படுகிறது.

முதலாளித்துவ “நியுக்ளியர் பேமலி” எனப்படும் கருக் குடும்பம் என்கிற நிறுவனம் எப்படி இடிபலால் கட்டப்படுகிறது என்பதை சொல்வதாக, அல்லது இடிபல் இல்லாமல் குடும்பம் உருவாக முடியாது என்பதை சொல்வதாக, தாயாக வந்த பெண்ணை புணர்ந்தபின், தனது தாயாகவே அவளை வரித்துக்கொண்டு விடுகிறான். அதன் பின் குடும்பம் பந்தம் பாசம் கருணை என்பதற்குள் நுழைந்துவிடும் அவன் தனது குற்றங்களின் உணர்ச்சிகளிலிருந்து விடுபட முனைகிறான். அதாவது நாயகன் உடலானது குடும்பம் என்கிற நிலமயமாதலுக்கு (டெர்ரிட்டேரியலைஸ்) உட்படுத்தப்படுகிறது. ஆனால், தாயாக வந்தபெண், தனது மகளை கொன்றவன் என்றவகையில் இவனிடம் தாய் என்கிற பாசத்தை ஊட்டி, அவன் கண்முன் தான் கொலையுறுவதன்மூலம் தீரா மனத்துயருக்கும், பிறழ்ச்சிக்கும் அவனை ஆளாக்க முனைகிறாள்.  தாய் என்கிரு கருணை வடிவை இப்படியான ஒரு தண்டணை உணர்வாக மாற்ற முயற்சிப்பாள். இடிபலாக்கம் என்பது சுயதண்டணை சார்ந்த குற்ற உணர்வின் வெளிப்பாடே. முற்றிலும் உளவியல் தளத்தில் நகரும் திரைப்படமானது, தொடர்ச்ச்சியான காட்சிகள்மூலம், ஒரு உளவியல் ஆய்விற்கான பல திறப்புகளைக் கொண்டதாக மாறிவிடுகிறது.

தனது இறந்துவிட்ட மகனுக்காக அவள் பின்னும் ஸ்வெட்டர், மகனாக தன்னை வரித்துக் கொண்டவன் அணிவதற்கான முயற்சியாக சித்தரிக்கப்படும் காட்சிகள் நுட்பமாக தாய்-மகன் பதிலீட்டை செய்கிறது. தந்தை முற்றிலுமாக இருப்பற்று மறைவியக்கம் கொள்கிறார் கடவுள்போல.

திரைப்படத்தில் விரிவாக பேசப்படவேண்டிய பல குறியீட்டு நிகழ்வுகள் உள்ளன. மீன், முயல், ஸ்வொட்டர், கிதார், தனக்குமுன் உள்ள இயற்கையை காணமுயலும் ஊனமுற்ற புத்தபிக்கு இப்படி. இத்தகைய உயிருள்ள உயிரற்ற பொருட்கள் எல்லாம் மிகவும் நுட்பமான பல குறியீடுகளாக கையாளப்பட்டு உள்ளன. பணமதிப்பு மட்டுமே கொண்ட வாழ்வின் ஆன்மீகமற்ற வறண்டுவிட்ட தன்மைப் பற்றிய விமர்சனமாக இத்திரைப்படம் அமைந்து உள்ளது. கருணை ஈரம் அன்பு எல்லாம் கொன்றொழிக்கப்பட்டு கடவுளின் இடத்தை பணம் கைப்பற்றிவிட்ட முதலாளித்துவத்தின் உலகமயம் என்கிற புதிய மதத்தை விவரிக்க முயல்கிறது. தந்தை=பிதா, தாய்=மேரி, மகன்=ஏசு என்ற கிறித்தவ இறைவடிவம் கருக்குடும்ப பிம்ப வடிவமாக ஆழ்த மனித உணர்வாக குறியீட்டைக் கொள்கிறது. வழக்கமான கிம் கி-டுக் திரைப்படங்களைப்போல இல்லாமல், இதில் நேரடியாக முதலாளித்துவத்தின் உலகமயமாதலில் நிதிமூலதன ஆதிக்கத்தின் விளைவுகள் பேசப்பட்டு உள்ளது. பணம் என்பது ஒரு குறிப்பானாகத் துவங்கி இன்று குறிப்பீடாகி அதுவே முழுமையான குறியாக, பொருளாக, அர்த்தமாக மாறிவிட்டதையும், பணம் என்பது கடவுளின் இடத்தை கைப்பற்றி கருணையை கொன்று விட்டதையும் விவரிக்கிறது பியாட்டா. உடலின் பொருள்மதிப்பு என்கிற பிம்பமே இச்சினிமா.


- ஜமாலன் (”கிம்-கி டுக் சினிமாட்டிக் உடல்கள்” (நிழல் வெளியீடு)  என்ற எனது நூலில் வெளிவந்த கட்டுரை) - 24-10-2017[1]முதலாளியம் கருக்குடும்ப அமைப்புகளின் அடிப்படையாக இடிபலாக்கம் என்பதை உள்வயப்படுத்தி அதற்கான உளவியல் விளக்கங்களை அளித்தது, தனது தொழில்துறை வளர்ச்சிக்காக பாலியல் என்பதை ஒடுக்குமுறையாக கதையாடியது. பாலியல் என்பதை தனது சொல்லாடல் களத்திற்குள் கட்டுப்படுத்தியும் பெருக்கியம் பாலியல் மைய உடல்களாக எல்லா உடல்களையும் சங்கதேப்படுத்தியது (கோடிங்). இவ்வாறாக, பிராய்டியம் முன்வைத்த இடிபலாக்கம் என்பது முதலாளியத்திற்கான உடல்-முதலீட்டை உருவாக்கியது குறித்து நிறைய ஆய்வுகள் வந்து உள்ளன. எனது கார்டீசிய மனங்களும் கார்ட்டுனாகிய உடல்களும் என்ற தொடரில் இது விரிவாக விவாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக தெல்யுஸ்-கத்தாரி இணைந்து எழுதிய ”கேப்பிட்டலிஸம் அணட் ஸ்கீஷோபரோனியா” என்று நூல் தொகுதியில் முதல் நூலான ”ஆண்டி இடிபஸ்” என்ற நூல் பிராய்டிய உளவியல் வேட்கை என்பதை இன்மையாக்கி பற்றாக்குறையாக்கி முதலாளியத்தின் உடல்-முதலீடுகளை உருவாக்கியதை விவரித்து அதற்கு எதிரா ஆன்டி-இடிபல் என்ற கருத்தாக்கத்தை வளர்த்தெடுத்து உள்ளனர். 
             

சினிமாவில் சலனிப்பது அகவெளியா? புறவெளியா? - பகுதி-1

சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை பிடித்துவிட்டார்கள். வினை விதைத்தவன் வினையறுப்பான் என்று முதுமொழியாகவோ அல்லது உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்று பழமொழியாகவோ அல்லது எந்த ஒரு வினையும் அதற்கு சமமான எதிர்வினையைக் கொண்டிருக்கும் என்ற நியூட்டனின் விதியையோ காரணமாக்கிக் கொள்ளலாம். சுவாதி கொலை செய்யப்பட்டது கொடுரமானதும், கொரூரமானதும்கூட. அதன் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டியதிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஒருவாரக்காலமாக தொலைக்காட்சி, சமூகவலைத்தளம், பத்திரிக்கைகள் முன் உட்கார்ந்து அதனைக் கண்ட சமூகமனம் ஒரு ஆறுதலை அடையும். காவல்துறையோடு துப்பறிய பயணித்த சமூகமனம் இப்போது வெற்றியை அனுபவித்து ஆசவாசம் கொள்ளும். நாளை முகநூலில் தனது ரகசிய காதல் உணர்வை முகந்தெறியா யாரிடமாவது நுழைத்து நிலைத்தகவல் போட்டு ரகசிய இன்பம் கொள்ளும். மற்றொரு நிகழ்வுவரை சமூகமனம் தனது சுயத்தின் இன்பத்தில் சாய்ந்துகொண்டு சல்லாபிக்கும். அதன் கண்கள் கட்டப்பட்டு பகல் கனவில் திளைக்கும்.

ஆக, ஊடகங்களின் ஒரு சுவராஸ்யமான சினிமா முடிவிற்கு வந்தவிட்டது. இதை சினிமா என்றவுடன் வாசிப்பவர் கொள்ளும் எரிச்சல், கோபம் நியாயமானதே. காரணம் சினிமா என்றால் பொய், புனைவு, கதை என்பதான கருத்தாக்கத்தின் அடிப்படையில் வரும் கோபமே. ஒருவேளை இந்த கொலை நிகழ்வை ஒருவர் சினிமாவாக எடுக்கக்கூடும். அதில் உண்மைக்கதை என்று துணைத்தலைப்பும் இடக்கூடும். 

வாழ்க்கையிலிருந்து சினிமா என்ற ஒரு கோட்பாட்டை நிலைநிறுத்த முயல சினிமா ஆய்வறிஞர்கள், திறனாய்வாளர்கள், விமர்சகர்கள் முயலலாம். சினிமாதான் உலகை கெடுத்தது என்றோ, உலகை உய்வித்தது என்றோ லாவணிக் கச்சேரிகள் நடத்தலாம்.

சினிமா வாழ்க்கையல்ல. ஆனால் வாழ்க்கை ஒரு சினிமாவாக மாறிவிட்டது என்பதைதான் இத்தகைய சம்பவங்கள் வழிப் பெருக்கப்படும் ஊடகங்கள் உணர்த்துகின்றன. சினிமா வாழ்வின் பாதிப்பு அல்ல. வாழ்வுதான் சினிமாவின் பாதிப்பாகியுள்ளது. வாழ்வில் மறுக்கப்பட்ட (எம்ஜியாராதல் = ரட்சகனாதல்), மறைக்கப்பட்ட (கமலஹாசனாதல் = காதல், காமம்), மறக்கப்பட்ட (ரஜனியாதல் = எதிர்நாயகன்/இரட்சக ரௌடி) (இவை உதாரணங்கள்தான் விரிவாக ஆராயப்பட வேண்டிய தமிழ் சமூக-உளவியல் தளம் இது என்பதை மட்டும் சொல்லிவைப்போம்) இடைவெளிகளை சினிமா இட்டு நிரப்புகிறது.

சுவாதியின் கொலை நிகழ்வு இட்டு நிரப்பியிருப்பது பெண், பெண்மை, பெண் உடல் அதை எதிர்கொள்ளும் ஆண், ஆண்மை, ஆணுடல் மற்றும் அதுசார்ந்த அதிகாரக் கருத்தாக்கமே. சுவாதியின் கொலையை கண்டித்து கண்ணீர் சிந்தி, காய்தல் உவத்தல் இன்றி கடுமையாக எதிர்த்த எல்லா ஆண்மனங்களும், தனக்கு சொந்தமான பெண் உடல்மீது இது நிகழ்ந்துவிடக்கூடாது என்ற பயத்தில் பிதற்றியவையே. தன் வாழ்வு சினிமா அல்ல என்று கொள்ளும் ஆறுதலில் தனது சினிமாவை நிகழ்த்தியதே. இது ஒரு மாய்மாலமான சமூகமனம். தன்முனைப்பும், தன்குடும்ப முனைப்பும் மட்டுமே தானா”-க் கொண்ட சமூகமனம். இடிபலைசேஷன் என்ற குடும்பவயமாதல் என்பதில் உள்ளது இதன் அரசியல். காதலும், காமமும் குடும்பம் என்ற அமைப்பின் உற்பத்திச்சக்தி. அது சமூகத்தில் பாயும்போது கொலையாகவும், தற்கொலையாகவும், ஆசிட் வீச்சுகளாகவும், மார்ப்பிங் ஆபாசப்பட விநியோகங்களாகவும் மாறுகிறது.  

பிரச்சனை சினிமா மட்டுமல்ல. குடும்பம் பழக்கிய நற்குடிகளின் மனத்தளத்தில் இருக்கும் ஒடுக்கப்பட்ட வன்மமே. இந்த வன்மம் மனத்தளத்தில் உறைய காரணமாக அமையும், மத, சாதிய, கல்விக்கூட, வேலைதடதள, நட்பவட்ட, காதல்வட்ட சூழல்கள் முக்கியமானவை. உண்மையில் சினிமாவைப் பார்த்து மக்கள் இதற்குப் பழகவில்லை. மக்களைப் பார்த்தே சினிமா பழகிக்கொண்டுள்ளது. சினிமா என்பது மக்கள் புழங்கும் மற்றொரு வெளி.

சுவாதியின் கொலைநிகழ்வில் காட்டப்பட்ட தீவிரம் எல்லா உடல்களுக்கும், உயிர்களுக்கும் அரசு மற்றும் பொதுமக்கள் நலம் சார்ந்த அமைப்புகளால் தீவிரமாக செய்யப்பட வேண்டும். ஆனாலும். அப்படி நடப்பதில்லை என்பதுதான் அரசின் தேர்ந்தெடுப்புகள் பற்றியும், அதன் அரசியல் பற்றியும் சிந்திக்க வைக்கிறது. குறைந்தபட்சம் ஒரு நிருபயாவும், சுவாதியமாவது சமூக மனசாட்சியை தட்டி எழுப்ப பயன்பட்டிருக்கிறார்கள் என்று ஆறுதலடைந்துக் கொள்ளலாம். இந்த மனசாட்சிக்கு தெரிந்தது எல்லாம் தான் மற்றும் தன் குடும்பம் என்பது மட்டுமே.

சுவாதி கொலையை சாதி, மத சாயம்பூசி சாதிக்க நினைத்த துவேசிகள்? இவ்வளவு தீவிரமாக 10 தனிப்படைகள் அமைத்து ஒருவாரத்தில் கொலையாளியை பிடித்து காவல்துறையின் செயல்பாட்டிற்கு இப்பொழுது என்ன சொல்வார்கள்? கொல்லப்பட்டவர் பெண். கொன்றவன் ஆண். இதுமட்டுமே இதில் தீர்மானகரமானது. இருவருக்கிடையிலான சிக்கல், கொலைக்கான காரணம் இனிதான் வெளிவரும். இப்போது சுவாதிக்கு துடித்தவர்கள் இதுவரை எந்த கொலைகளுக்கு துடித்து எழுந்தார்கள் என்ற கேள்வியை தனக்குள் எழுப்பிக் கொள்வதில்லை. கொலை உடலில் சாதியம், மதம் துவேஷம் பார்க்கும் இந்த பிணந்தின்னிகள்தான் பிற சமூகத்தை, ஒடுக்கப்பட்டவர்களை. சிறுபான்மையினரை பலியிடுவது பற்றி வாய் திற்ககாதவர்கள். இதுதான் சமூக மனசாட்சி. சாதியும் மதமும் நிரம்பிய வன்மம் மிக்க மனசாட்சி.   

இனி சமூகமனசாட்சிப்படி அவனுக்கு தண்டனை வழங்க வேண்டும். தீர்ப்பிற்கு பிறகு சினிமாவின் பாகம் இரண்டு வெளிவரும். ஊடகங்கள் வண்ணவணணமாக விவாதம், உரையாடல், பேட்டிகள் என அதை மறுபடியும் காட்சிக்காண் விழாவாக மாற்றும். இடையில் கபாலியின் களேபரம் வேறு உள்ளது. அதை நினைத்தால் இப்பவே வயிற்றை கலக்குகிறது. இனி அவன் சுவாதி ஜீன்ஸ் போட்டிருந்தார் அதனால் கொன்றேன் என்பதுபோன்ற கருத்துக்களை சொல்லி இந்திய பழங்கலாச்சாரத்தை காப்பாற்றாமல் இருந்தால் ஆறுதல்தான். நல்லவேளையாக அவனுக்கு தாடி முளைக்கவில்லை. முளைத்திருந்தால் அவன் இந்தியக் கலாச்சார எதிரியாக சித்தரிக்கப் பட்டிருக்கலாம். 
  
கவனிக்க வேண்டியது என்னவென்றால், சுவாதி கொலை எழுப்பிய ஆர்வம் ஊட்டும் உரையாடல்கள்தான். பெண்கள் செல்போனை எப்படி பயன்படுத்துவது துவங்கி காதல், கள்ளக்காதல், பெண்களின் தனிப்பட்ட எழுச்சி என பல உரையாடல்கள். கொலைகாரன், கொலை செய்யப்பட்டவர்கள் எல்லாம் தமிழ் சினிமாவினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும், எல்லாவற்றிற்கும் சினிமாவே காரணம் அல்லது சினிமா ஒரு காரணம் என்பதும் இதில் தீவிரமாக உரையாடப்பட்ட கருத்தாக்கங்கள். இது சமூகம்-சினிமா அல்லது அகம்-புறம் அல்லது யதார்தத்திற்கும் சினிமாவிற்கும் உள்ள உறவு என்ன என்பதாக ஆராயப்பட வேண்டிய ஒன்று என்பதையும், சினிமா குறித்து ஆய்வாளர்கள் இந்த புள்ளியை கவனம் கொல்வதும் முக்கியம் என்பதை வலியுறுத்தியுள்ளது.

சினிமா விமர்சனம், திறணாய்வு என்ற பெயரில் பார்த்த படத்தின் கதையை எழுதி கடைசி பாராவில் தனது கருத்தை எழுதிச் செல்லும் முறையை கைவிட்டு, சினிமா கொள்ளும் சமூக உறவு என்பதிலிருந்தும், சினிமா என்பது ஒரு ஊடகமல்ல அது மற்ற ஊடகங்களிலிருந்து மாறுபடும் முக்கியமான இடம் என்ன என்பது குறித்து கோட்பாடு சார்ந்த விமர்சனங்கள் திறனாய்வுகள் அவசியமானவை. சினிமா குறித்து விவரிக்கப்பட வேண்டிய கோட்பாட்டுத் திறானாய்வுகளின் முக்கியத்துவத்தையே இவை வெளிப்படுத்துகின்றன.

காட்சிகள் ஒரு சட்டகத்திற்குள் துண்டாடப்பட்டு அடக்கப்பட்டு கதையாடப்படுவதே சினிமா. அது திரை அரங்கில் நிகழலாம், தொலைக்காட்சியில் நிகழலாம் அல்லது பார்வையாளனின் மனப்பிறழ்ச்சியில் (பரொனியாவக்கப்பட்ட மனத்தளத்தில்) நிகழலாம். சுவாதி கொலை கொலைகாரனின் மனத்தளத்தில் நிகழ்ந்த சினிமா. உச்சக்காட்சி எக்மோர் கொலை. அது பொதுத்தளத்தில் நடத்திக் காட்டப்பட்டது. பார்வயைாளரான சமூகத்தில் தொடரும் அச்சினிமாவின் உச்சக்காட்சிகள் இனிதான் நிகழும். அதற்காக காத்திருக்கலாம்.


- ஜமாலன் (02-07-2016)
             

ரோஹித் தற்கொலையும் இடதுவாத நர்சரிகளும்ரோஹித் வெமோலா முன்பு கம்யுனிஸ்ட் கட்சியில் இருந்துள்ளார். அங்கு நிலவிய சாதிய மனநிலையினால் அதிலிருந்து வெளியேறி அம்பேத்கர் வட்டத்தை துவக்கியுள்ளார். அவர் கம்யுனிஸ்ட் கட்சியைவிட்டு வெளியேறக் காரணமாக இருந்த சாதிய மனநிலை என்பதை ஏதோ ஒரு இயல்பு நாளடைவில் தானாக மாறிவிடும் என்பதாக கடந்துவிடமுடியாது. சாதி பிறப்போ, இயல்போ, தலைவிதியோ, கர்மப்பலனோ, கௌரவமோ அல்ல. அது ஒரு உடலரசியல்நிலை. உடலே சாதியாக, மதமாக, இனமாக கட்டப்பட்டுவிட்ட நிலை. அது உடலின் இயல்பு அல்ல. இயல்பாக ஆக்கப்பட்டுவிட்ட ஒன்று. இயல்பு என்ற ஒன்று இயக்கநிலையில் உள்ள உடலில் சாத்தியமில்லை. அது சாராம்சவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. சாராம்சவாதம் பாசிச வேர்களைக் கொண்டது. அடையாளத்தில் தேங்கி அழுகிய உடலில் மட்டுமே சாத்தியமானது. சாதிபார்க்கும் உடல், மதம் பார்க்கும் உடல், இனம் பார்க்கும் உடல், நிறம் பார்க்கும் உடல், பாலினம் பார்க்கும் உடல் எல்லாம் அடையாளத்தில் தேங்கிய அழுகிய உடல்களே. இந்த அழுகிய உடல்களிலிருந்து தப்பி பிழைக்க ரோஹித் கண்ட மார்க்கமே தற்கொலை. உடலை இல்லாதொழிப்பது. இது ஒரு உடல்ரீதியான கலகம், போராட்டம். எனது மரணத்தை நானே தீர்மாணித்துக் கொள்வதற்கான உரிமையை நிலைநாட்டி அதிகாரத்தை கவிழ்த்துக் காட்டும் செயல். அது ஏற்படுத்தும் அலை எல்லோர் சிந்தனையிலும் பரவி உணர்தலாக மாற்ற எண்ணும் அரசியலியக்க நடவடிக்கை. 

உடலின் இந்த அழுகல் தன்மையை, இயல்பு என்று தேங்கிவிட்ட இவை மீண்டும் மீண்டும் அழுகி சமூக முடைநாற்றும் வீசும் நிலைக்கு சென்றிருப்பதே தற்போதைய இந்துத்துவ பாசிசமயமாதலின் வெளிப்பாடு. இந்த அழுகலை ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு செயலிலும் உணர்ந்து வெளியேற வேண்டும் என்றால் நமக்குள் செறிக்கப்பட்டுள்ள மொழி துவங்கி, செயல்கள் வரை அனைத்தும் நுண்ணுணர்வு கொண்டதாக ஓர்மையுடன், தன்னறிவுடன் செயல்படக்கூடிய ஒரு இயக்கமிக்கதான உடலைப் பெற வேண்டும்.  உடல் என்பது மாறிக்கொண்டே இருப்பதான ஒரு மூலக்கூற்றியல் நிலை தேவை. அதற்கு நமது உடலிற்குள்ளான நிலைத்து அழுகும் மோலார் அடையாளங்களை விட்டு வெளியேறி மூலக்கூறுநிலையான இயக்கமிக்க உடலைப் பெற வேண்டும். அதற்கான எச்சரிக்கையே ரோஹித்தின் மரணம். அழுகிப்போன நமது உடலை நோக்கி எழுப்பியிருக்கும் கேள்வி. இன்னும் இந்த அழுகலை சகித்து வாழத்தான் போகிறீர்களா? வெட்கமில்லையா? என்ற ஏளனத்தை அழுகிய நம் உடல்மீது வீசிய மரணம் அது. 

சமத்துவ சிந்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட கம்யுனிஸ்ட் அமைப்புகளே சாதியத்தைக் கொண்டு இயங்குகிறது என்றால் அங்கு மார்க்சிய சித்தாந்தம் என்னவாக உள்வாங்கப்பட்டு உள்ளது என்கிற கேள்வி உள்ளது. இந்திய கம்யனிஸ்ட் கட்சிகள் .இளைஞர்களுக்கு மார்க்சியத்தை பாடத்திட்டமாக போதிப்பதில் எந்த பயனும் இல்லை. இயங்கியல் பொருள்முதலாவாதம், வரலாற்றுப் பொருள்முதலவாதம் மற்றும் அரசியல் பொருளாதராம் என்ற பாடத்திட்டத்தின் அடிப்படையில் போதிப்பது. பின் ராகுல சாங்கிருத்யாயன் வால்கா முதல் கங்கை வரை மற்றும் கார்க்கியின் தாய் நாவலை படிக்கச் சொல்வது என்ற அடிப்படையில் இந்திய-மார்க்சிய-நர்சரிகளை நடத்துவதில் எந்த பயனும் இல்லை என்பதை 60 ஆண்டுகால வரலாறு தெளிவாக காட்டியுள்ளது. இந்தியாவில் காங்கிரஸா?கம்யுனிஸ்டுகளா? என்று இருந்த நிலை மாறி இன்று கம்யுனிஸ்டு கட்சிகள் மூன்றாவது, நான்காவது அணி என ஓரந்தள்ளப்பட்டுள்ள நிலைக்கு என்ன காரணம் என்பதை மறுபரிசீலனை செய்யக் கோறுகிறார் இந்த தற்கொலைமூலம். 

தனது உடலை பாலிட்டிக்ஸ் ஆக்காதீர்கள் என்று சொல்வதன் மூலம் அது ஒரு பொலிட்டிக்கல் சிந்தனை என்பதாக மாற்றியுள்ளார் ரோஹித். அவரது கடிதம் அரசியல் என்பது மின்னியக்கநிலைபோல வெகுமக்களிடம் உள்சென்று இயங்க வேண்டும் அது சாத்தியமற்ற நிலையில் இந்த முடிவு தவிர்க்க முடியாதது என்கிற உள்ளோட்டம் கொண்டிருக்கிறது. 

தீண்டாமை என்பது உடலின் தூய்மைபற்றிய அதீத பெருமிதம் மற்றும் உள்ளணர்வில் கட்டப்பட்டு உள்ளது. அது ஒரு சமூக ஒடுக்குமுறையோ சுரண்டலோ மட்டுமல்ல, உடலின் புனிதம் பேணும் உடலின் இயல்பு என்ற உடலின் மாறாத ஒரு உணர்வநிலை பற்றிய கற்பிதம். இதை கற்பிதமாக உணராமல் இயல்பாக ஏற்பது பற்றிய ஒரு உணர்வமிக்க கடிதமே வெமூலாவின் இறுதிக்கடிதம்.  மனித சாரம் என்று ஒன்று உண்டு என்பதும் மனிதநேயவாதம் என்ற ஒன்று இருப்பதான பாவனைகளும் தீண்டாமையை ஒழிக்காது. மனிதன் தன்னை தனிச்சிறப்பாக கருதாத, மனிதனாதல் என்பது மிருகமாதல் போன்று மற்றொரு ஆதல் நிலைதான் என்ற அரசியல் உணர்தல் தேவை. 

”தத்துவம் மக்களைச் சென்றடைந்தால் பௌதீக சக்தியாக உருவெடுக்கிறது” என்றார் மார்க்ஸ். கம்யுனிஸ்ட் என்பது ஒரு அடையாளச் செயல்பாடு அல்ல. அது ஒரு ஆதல் (பிக்கமிங்) ஆக மாறும்போது மட்டுமே இனக்குரோதம் சாதியம் போன்றவை வெளியேறும். வெறும் அறிவார்ந்த வாசிப்பால் அது சாத்தியமில்லை. கம்யுனிஸ்டுகள் முதலில் மார்க்சியத்தை வாசிப்பதுவோடு நில்லாமல் அதை உணரவேண்டும். உணர்தல் என்பது உடல்நிலையாக மாறும் ஒன்று. அப்படி ஒரு மாற்றம் உடலில் நிகழாதவரை கம்யுனிஸ்டுகள் ஒரு சராசரி முதலாளியம் உருவாக்கிய அரசியல் விளையாட்டின் ஒருபுறத்தில் நின்றுவிளையாடும் கட்சிகளாக மட்டுமே இருப்பார்கள். மற்றமையாதல் (பிக்கமிங் அதராக), சிறுவாரியாதல் (பிக்கமிங் மைனராக) என்பதாக ஆதலாக, உணர்தலாக, உடலாக மாறாத கம்யுனிஸம் துவங்கி எந்த ஒரு முற்போக்கு இடது அரசியலும் வெறுமனே ஒரு அடையாள அரசியல் கட்சியாகவே எஞ்சும். இன்னும் எண்ணற்ற ரோஹித் வெமுலாக்கள் அக்கட்சிகளைவிட்டு வெளியேறவேச் செய்வார்கள். போராட மார்க்கமற்று, ஆதரவற்று, தனிமைப்பட்டு, அந்நியமாகி சுயவதையாக தற்கொலை நோக்கி நகர்வது தவிர்க்கமுடியாததாக மாறும்.

- ஜமாலன் (22-ஜனவரி-2016)
             

“மேலும்” விருதிற்கான ஏற்புரை.

நண்பர்களுக்கு வணக்கம்.

“மேலும்”-இதழ் வழங்கும் இவ்விருதைப் பெறுவதில் உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இவ்விருதை வழங்கிய “மேலும்” அறக்கட்டளைக்கும், அதனை நடத்திவரும் மதிப்பிற்குரிய “மேலும்” ஆசிரியர் சிவசு மற்றும் மதிப்பிற்குரிய தமிழவன் அவர்களுக்கும் நன்றி. விருதுகள் நபர்களை அங்கீகரிப்பதில்லை அவர்களது பணியை மற்றும் எழுத்தை அங்கீகரிப்பவை. அந்தவகையில் எனது எழுத்திற்கும் விமர்சனமுறைமைக்கும் கிடைத்த அங்கீகாரம் இது.

இச்சந்தர்ப்பத்தில் உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர் சார்த்தர் தனக்கு வழுங்கப்பட்ட உலகின் மிகப்பெரும் விருதான நோபலை நிராகரிக்கும்போது கூறிய வாசகமே நினைவிற்கு வருகிறது. நோபல் பரிசை எனக்கு தந்து என்னை நிறுவனமாக்க முயல்கிறார்கள் என்பதே அது. இக்கருத்தில் அவர் பரிசு என்பதன் வழியாக நிறுவன மயப்படுத்தம் போக்கை நிராகரிப்பது முக்கியமானது. பெரும்பாலான பரிசுகள், விருதுகள் நிறுவனமயப்படுத்தும் தன்மையிலேயே தரப்படுகிறது. பரிசு யாரால் யாருக்கு தரப்படுகிறது அதன் நோக்கம் என்ன என்பதே முக்கியம். அவ்வகையில் நிறுவனமாக தன்னை ஆக்கிக் கொள்ளாத ”மேலும்” இதழின் பெயரில் நிறுவனங்களில் பங்களிக்காத பேரா. சிவசு அவர்களால் இவ்விருது வழுங்கப்படுகிறது. இவ்விருது நிறுவனங்களுக்கும், நிறுவன முறைமைகளுக்கும் எதிராக உள்ளவர்களையும், அதனை சாராதவர்களுக்கும் வழங்கப்படுகிறது என்பது முக்கியம். சென்ற ஆண்டு விருதை அருமை நண்பர் எஸ். சண்முகம் பெற்றார். இந்த ஆண்டு எனக்கு வழங்கப்பட்டு உள்ளது. இது எனது திறனாய்வுக்கும், விமர்சனத்திற்கும் கிடைத்திருக்கும் ஒரு மதிப்பீடு மற்றும் அங்கீகாரம்.

படைப்பாளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் விருதுகளிலிருந்து விலக்காகி, திறனாய்வு மற்றும் விமர்சனத் துறையாளருக்கு வழங்கப்படுவதே இவ்விருதின் சிறப்பு எனலாம். திறனாய்வாளன் எத்தனை சமூகம் முக்கியத்துவம் வாய்ந்தவன் என்பதை எனது சிற்றேடு இதழ் நேர்காணலில் விளக்கி உள்ளேன். வாய்ப்புள்ள நண்பர்கள் அதை வாசித்தறியலாம். குறிப்பாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விழைகிறேன். திறனாய்வாளன் என்பவன் சமுகத்தையும் படைப்பையும் இணைக்கவும், இணக்கவும் செய்பவன். பிரதிக்கும் வாசகனுக்கும் இடையில் பிரதியை சமூகவயப்படுத்துவதுடன் வாசகனையும் சமூகவயப்படுத்துகிறான். திறனாய்வு அற்ற சமூகம் இலக்கியத்தை எப்படி பண்டமாகவும், சுவைஞர்களை உட்கார வைக்கும் உணவு மேசையாகவும் மாற்றும் என்பதற்கு ஒரு உதாரணமே தற்போதைய தமிழ் சூழல் இலக்கிய நிலை என்றால் மிகையாகாது. திறனாய்வு இன்றி ஒரு சமூகம் தன்போக்கை உணரமுடியாது. அவ்வகையில் திறனாய்வாளனின், விமர்சகரின் பணி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லி என் பற்றியும் எனது எழுத்து பற்றியும் ஒரு சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன். 

“மேலும்” இதழில்தான் எனது எழுத்துப்பணியின் விமர்சன மற்றும் கோட்பாடு சார்ந்த எழுத்துமுறை துவங்கியது. எனது ”கவிதையும் சிதைவாக்கமும்” என்ற கட்டுரை “மேலும்” இதழில் வெளிவந்தபோது எனது எழுத்திற்கான அங்கீகாரமாகவும், எழுதுவதற்கான நம்பிக்கையாகவும் எனக்குள் உருவாகியது. காரணம் “மேலும்” இதழ் தமிழக அறிவார்ந்த சிந்தனை தளத்தில் ஒரு முக்கியமான நவீனமான சிந்தனையை பிரதிநிதித்துவப்படுத்திய இதழ். தமிழ் சிந்தனையை அடுத்த தளத்திற்கு நகர்த்திய ஒரு போக்கே ”மேலும்” இதழ். தமிழில் 80-களுக்கு பிறகு அறிமுகமான புதிய விமர்சனமுறையை, சிந்தனை முறையை அதாவது அமைப்பியல் துவங்கிய பின் அமைப்பியல்வரையான சிந்தனைமுறையை தமிழில் நிகழ்த்திப் பார்த்த ஒரு ஆடுகளமே, ஒரு தளமே ”மேலும்” இதழ். அதில் எழுதிய சிந்தனையாளர்கள் குறிப்பாக தமிழவன், சிவசு, நாகார்ஜீனன், அ. மார்க்ஸ், எம்டிஎம், பிரேம் மற்றும் எஸ். சண்முகம் உள்ளிட்ட சிறுபத்திரிக்கை தொடர்புடைய சிந்தனைாளர்களும், பல்கலைக்கழகம் சார்ந்த அறிவுப்புலப் பேராசிரியர்களும்தான் இன்று தமிழ் சிந்தனையின் விமர்சன மரபை, கோட்பாட்டு சிந்தனை தளத்தை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாக உள்ளனர்.

ஒரு சமூகத்தின் அறிவுப்புலத்தை, சிந்திக்கும் முறைமையை, உலகப்பார்வையை கட்டமைப்பது இத்தகைய சிறு சூழலைச் சார்ந்த சிந்தனைகளும், அதில் புழங்கும் அறிவுவுஜீவிகளுமே. உதாரணமாக சொல்லாடல், பணுவல், கட்டுடைப்பு, சிதைவாக்கம் உள்ளிட்ட பல வார்த்தைகள் இன்று வெகுசன ஊடகங்களில் மிகச்சாதரணமாக புழங்குவதைக் காணலாம். இத்தகைய புழக்கத்திற்கான இச்சொற்களை அன்று உருவாக்கிய ஒரு அறிவுத்தளமே “மேலும்” இதழ். ஒவ்வொரு சமூகத்திற்கும் அதற்கான ஒரு சொல்லாடல் புலத்தை வடிவமைப்பதும் அதை இயக்கத்திலும், ஆட்டத்திலும் வைப்பதே இலக்கியத்தின் பணி. அதாவது முந்தைய சொல்லாடலை இன்றைக்கான தகவமைப்பாக்கி இயல்பாக்கம் செய்வதே இலக்கியத்தின் பணி. பல்வேறு உலகை படைத்தளிப்பதன் மூலம், வாழ்வதற்கான பல திறப்புகளை, சாத்தியங்களை உருவாக்குவதே இலக்கியத்தின் பணி. அத்தகைய பணியை தமிழில் முன்னின்று நடத்திய ஒரு இயக்கமே “மேலும்” என்றால் மிகையாகாது. இத்தகைய சிறப்பு மிக்க ஒரு இயக்கம் வழங்கும் இந்த விருது என்னை இன்னும் பொறுப்பு மிக்க விமர்சகனாக மாற்றும். அந்தவகையில் இவ்விருதை ஏற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

மௌனியின் செம்மங்குடி ஊர்தேடல் போல என்னைப்பற்றிய சிறு அறிமுகக்குறிப்பு. நான் தஞ்சைப்பகுதியில் உள்ள பாடல்பெற்ற சைவத்தலமான குடந்தை எனப்படும் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகேஸ்வரம் என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவன். எங்கள் ஊர் ஒருவகையான புராணங்கள், பழங்கதைகளில் நிரம்பிய ஊர் என்பதே எனது முதல் இலக்கிய ஆர்வத்திற்கான அடிப்படை. புகழ்பெற்ற நவக்கிரகங்களில் ஒன்றான ராகுஸ்தலமே எங்கள் ஊர். அதேபோல் பிரபலமான வைணவத்தலமான தென்திருப்பதி எனப்படும் ஒப்பிலியப்பன் கோவில் உள்ளதும் எங்கள் ஊரே. இவற்றை எல்லாம்விட சுந்தர காளியம்மன் வருட உலா மற்றும் எங்கள் ஊரின் ஐதீகமும். பழங்கதையுடன் உறவும் கொண்ட ஜெம்புமாலிராஜன் கதை நாடகமும் கொண்ட ஊர்.

நாடோடியாக முடியாதவகையில் தேசங்களில் கட்டுண்டுவிட்ட நாம், நாட்டில், மண்ணில் அடையாளம் காணப்படும் இடமான ஊர் என்பதே எழுத்தாளனின் கற்பனைக்கும், இலக்கிய உணர்விற்கும் அடிப்படையாக அமைந்து உள்ளது. ஒரு உடலின் முதல் நிலமயமாதல் அதாவது தெல்யுஸ் வார்த்தைகளில் சொன்னால் “டெர்ரிட்டேரியலைசேஷன்” என்பது ஊரே. அதனால்தான் தொல்காப்பியம் அய்ந்திணைகளின் வாழிடங்களை வெவ்வேறு பெயரில் அடையாளப்படுத்துகிறது. நெய்தல் நிலம் பட்டினம் என்றும், குறிஞ்சி நிலம் காடு என்றும், மருதநிலம் ஊர் என்றும். ஆக, மருதமயமாகிவட்ட மனித வாழிடங்கள் இன்று ஊர் என் பெயரால் அழைக்கப்படுகிறது. ஆக ஒரு உடலின் நிலமயமாதலான ஊர் என்பது மனித உடலின் முதல் நினைவாக உள்ளது.

இந்த அடிப்படையில் ஒருவகை ஊர்தேடல் நினைவு என்பதில் பழமைவாத ஏக்கம் இருப்பதை உணரலாம். இத்தகைய ஏக்கத்தை ஒருவகையான பின்நவீன உணர்வு சார்ந்ததாக சொல்லலாம். காரணம் பின்நவீனம் நவீனத்திற்கு முந்தையதைப்பற்றிய ஒரு ஏக்கத்தின் அடிப்படையில் நவீனத்தில் பழமையை மறு உருவாக்கம் செய்வதன் வழியாக நவீனத்துவத்தின் உண்மையை புனைவாக்கி காட்டிவிடுகிறது. இத்தகைய பழமையின் நவீன உருவாக்கம்தான் நவீன மனிதனை நவீனத்தின் அழுத்தத்தத்திலிருந்து விடுவிப்பதாக உள்ளது. நவீனத்துவத்தின் உணர்வடிப்படைகளாக பதற்றம், அந்நியமாதல், நிலைகொள்ளாமை, பேரெந்திர அச்சம், உயிர்நிலைக்கான ஏக்கம் எனலாம். இந்த உணர்வெல்லைகள்தான் நவீனத்துவம் பேசும் “பகுத்தறிவு” என்ற ஆன்மீகத்திற்கான அடிப்படையாக மாறி உள்ளது. நவீனத்துவ இலக்கியத்தின் தேடலும் கட்டமைப்பும் இதனை சுற்றியே பின்னப்பட்டு உள்ளன என்பது மிகைக் கூற்றாகாது. இந்த மன அழுத்தம் ஏற்படுத்தி உள்ள இலக்கிய உணர்வை ஒரு விளைாயட்டாக, ஆட்டமாக மாற்றிவைத்ததே பின்நவீன உணர்வு எனலாம்.

இப்பின்நவீன உணர்வின் ஒரு புற அடையாளமே சமீபத்தில் உருவாகிவரும் பல ‘மால்கள்’ மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள். இவற்றை கவனித்தால் இவை பழமையை மறுஉருவாக்கம் செய்வதை அறியலாம். இவற்றின் பின்னணி இத்தகைய ஒரு உணர்வாக்கத்தின் வெளிப்பாடே. நட்சத்திர ஓட்டல்களில் ஆர்கானிக் உணவும், சராசரி உணவைவிட ஆர்கானிக் உணவு அணுகுமுடியாத விலையில் நிலையில் இருப்பதும் இதன் பின்னணி எனலாம். ஆக தன்னுருவாக்கமாக எனது ஊர் அமைந்த கதை என்பது சுயவிமர்சனமாக எனது பழமை ஏக்கத்தின் வெளிப்பாடே என்பதை பதியவைக்க விரும்புகிறேன்.

நான் எழுதத் துவங்கியது என்பது எனது சிறுவயதில் இருந்தே உருவான ஒன்று. சிறுவர் கதைகளில் துவங்கியது. இன்னும் சொல்லப்போனால் எனது அய்ந்தாம் வகுப்பில் துவங்கியது வாசிப்பும், நூலக பழக்கமும். நானே சிறுவர் இதழ்கள், கதைகள் கொண்ட ஒரு வாடகை நூலகம் வைத்து நடத்தினேன். அந்த காலத்தில் 75-களில் 5 காசுகள் துவங்கி 15 காசுகள் வரை உள்ள சிறுவர் கதைகள் வாங்கி அதை வாசிக்க 5 காசுகளுக்கு 3 புத்தகங்கள் என வாடகைக்கு விட்டு சிறநூலகம் நடத்தினேன். புத்தகங்கள் வாசிப்பதைவிட வாங்கி சேகரித்து அதை அடுக்கி பார்ப்பதே ஒரு ஆனந்தம் என்பதாக உருவாகிவிட்டது. இன்றுவரை வாசிக்க என வாங்கி சேர்த்த புத்தகங்கள் வாசித்ததைவிட அதிகமாகிவிட்டது.

எழுத்து என்பதற்கான அடிப்படை வாசிப்பும், வாசித்தவற்றைப்பற்றிய கற்பனைத்திறனும், சிந்திக்கும் பழக்கமும்தான். அதை தொடர்ந்து காப்பாற்றி வந்து உள்ளேன் என்பதே எனது இந்த ஐம்பது ஆண்டுகால வாழ்வில் மாறாத பழக்கமாகிவிட்டது. எனது ஒன்பதாம் வகுப்பில் வெகுசன வாசிப்பிலிருந்தும், வெகுசனபாணி கவிதை எழுத்துக்களிலிருந்தும் ஒரு பாயச்சலை உருவாக்கியது தமிழவனின் புதுக்கவிதை நாலு கட்டுரைகள் என்ற நூல்தான். அதன்பின் சீரிய இலக்கியத்திற்கு திரும்பி, தமிழவன் வழியாக அமைப்பியல் மற்றும் நாகார்ஜீனன், எம்டிஎம், பிரேம் வழியாக பின்நவீனம் அறிமுகமாகி, சக பயணியாக நண்பர் எஸ். சண்முகத்துடன் இந்த இலக்கியப் பயணம் தொடர்கிறது. நண்பர் ராமானுஜத்தின் தொடர்ந்த உரையாடல்கள் எனது எழுத்தை செழுமைப்படுத்தி வருபவை. தீராநதியில் தொடர்ந்து எழுத வாய்ப்பு தந்து எனது எழுத்தை பரவலாக்கியதில் நண்பர் கடற்கரய் பங்கு முக்கியமானது. எனது கல்லூரிக்கால நண்பர்கள் அரசு, ரவி சுப்ரமணியன், அமானுஷ்யன், கோமகன் மற்றும் என்னோடு சிறுபத்திரிக்கை நடத்திய நண்பர் ஆறுமுகம் மற்றும் பால்ய நண்பர்கள் மகேந்திரன், சிற்றரசு என அனைவருக்கும் எனது எழுத்து வளர்ச்சியில் ஒரு பங்கு உள்ளது என்பதை நன்றியோடு நினவு கூருகிறேன்.

எனது சிறுவயது எழுத்து இலக்கியத்தை கட்டமைத்ததில் சிறுவயது நண்பனாக இன்றுவரை என்னோடு உற்ற தோழமையாக இருந்து வரும் நண்பன் காலக்குறி ஆசிரியர் அ. ஜ. கான். எனது எழுத்திற்காகவே வறண்ட பாலைவனத்தில் காலக்குறி என்ற இதழை துவங்கி தொடர்ந்து எனது எழுத்தை அறிமுகப்படுத்தி வந்தான். எனது விமர்சன எழுத்தில் எந்த கட்டுப்பாடும் இன்றி சுதந்திரத்தை உருவாக்கி தந்து, எனது எழுத்தை முழுமையாக வெளியிடுவதும், அதனால் கட்டுப்பாடின்றி எழுதுவதற்கும் சிந்திப்பதற்கும் வாய்பை உருவாக்கி தந்து உள்ளான். இந்த வாய்ப்புதான் எனது எழுத்தின் ஒரு சுதந்திரபலமாக, சமரசம் செய்துகொள்ள வேண்டிய அவசியமற்றதாக உள்ளது. தனிப்பட்ட முறையில் கானிற்கு நான் நிறைய கடப்பாடு உள்ளவன் என்பதை நன்றியோடு பதிய விரும்புகிறேன்.

எனது எழுத்திற்கான வாய்ப்பையும், வளர்ச்சியையும் தந்த தமிழ்ச்சூழல் சிற்றிலக்கியங்கள், சிறு சூழல் அமைப்புகள், சிற்றிதழ்கள் அனைத்தையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

எனது இரண்டு நூல்கள் வெளிவந்து உள்ளது. மொழியும் நிலமும் என்ற தலைப்பிலும், நவீன தொன்மங்கள் நாடோடிக் குறிப்புகள் என்ற தலைப்பிலும். 90கள் தொடங்கி 2010 வரையிலான 20 ஆண்டு விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. தொடர்ந்து இலக்கிய அரசியல் மற்றும் கோட்பாடுகள் சார்ந்த கட்டுரைகள் எழுதி வருகிறேன். என் குறித்த எனது எழுத்து குறித்த விபரங்கள் சிற்றிதழில் வெளிவந்த எனது நேர்காணலில் விளக்கப்பட்டு உள்ளது. அதனால் கூறியது கூறலாக வேண்டாம் என அதை தவிர்க்கிறேன்.

இவ்விருதை பெறுவதற்கான எனது தகுதியைவிட எனது எழுத்தின் தகுதியை குறித்த எனது பார்வையை உங்களோடு இந்த ஏற்புரையில் பகிர்கிறேன். இலக்கியம், சமூகம், அரசியல் என்கிற ஒரு முப்பரிமாண அளவுகோலே எனது விமர்சனமுறையாக உருவாகி வந்து உள்ளது. நவீனத்துவம் மற்றும் பழமைவாதம் இரண்டிற்கும் எதிரான ஒரு விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருவது அவசியம் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறேன். பகுத்தறிவின் வளர்ச்சி என்ற பெயரிலான நவீனத்துவவாதத்திற்கும், கற்பணார்த்த பழமைவாதத்திற்கும். ரசனைசார்ந்த நுகர்வு வாதத்திற்கும் எதிரானதாக எனது விமர்சனமுறையை அமைத்துக் கொண்டு உள்ளேன். சமூக விஞ்ஞானப்பார்வையான மார்க்சிய துவங்கி அமைப்பியல், பின் அமைப்பியல், பின்நவீனத்தவம், பெண்ணியம், புதிய வரலாற்றுவாதம், சிதைவாக்கம் என் பல கோட்பாடுகளின் உள்ளோட்டத்தை விமர்சனமுறையில் அணுகி உருவாகி வந்ததே எனது பார்வை.

தற்போது எனது இலக்கிய அரசியல் என்றால் சிறபான்மையாதல் என்பதே. எப்பொழுதும் சிறுபான்மையாதல் என்பது ஒருவகையான ஜனநாயக இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கான வெகுமக்கள் அரசியல் எனலாம். சிறுபான்மை என்பது எண்ணிக்கை சார்ந்தது அல்ல. பன்மைத்துவம் சார்ந்தது. பெரும்பான்மை என்பதே ஓருமையானது. ஒற்றை சிந்தனையைக் கொண்டது. வன்முறையானது. யதார்த்தத்தில் பெரும்பான்மை எண்ணிக்கையில் சிறுபான்மையானது. சிறுபான்மை எண்ணிக்கையில் பெரும்பான்மையானது. காரணம் சிறுபான்மை என்பது பன்மை. அதனால் சிறுபான்மைகள் உண்டு. பெரும்பான்மைகள் கிடையாது. காரணம் பெரும்பான்மை என்பது ஒன்றுதான். பெரும்பான்மையை எதிர்ப்பதும் சூழலை உயிர்ப்புடன் வைப்பதும் சிறுபான்மைகளே.

சிறுபான்மையாக உள்ளவையே வளரும் தன்மைக் கொண்டது. பெரும்பான்மை என்பது வளர்ந்து தெவிட்டிய நிலையை அடைந்துவிட்ட ஒன்று. சிறுபான்மை பெரும்பான்மையாக வளர்வதற்கான இயக்க நிலையில் இருப்பது. அதுதான் சமூகபொதுபுத்திக்கு எதிரான பொராட்டத்தைக் கொண்டது. சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவது. இத்தகைய சிறசூழல் அமைப்புகளே நுண் அளவிலான சமூக இயக்கத்தை நகர்த்துபவை. சமூக எந்திரத்தின் பற்சக்கரமாக இயங்குபவை. இவ்வமைப்புகள் சமூகத்தில் ஏற்படுத்தப்படும் நுண் அளவிலான மாற்றமே அடுத்துவரும் சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவது. அதனால் எப்போதும் சிறுசூழலுடன், சிறுபான்மைகளுடன் இருப்பதும் சிறுபான்மையாக உருவாகிக் கொண்டு இருப்பதுமே உயிர்ப்புடன் வாழவைப்பது.

அவ்வகையில் “மேலும்” உள்ளிட்ட சிறுபத்திரிக்கை மற்றும் சிறசூழல் அமைப்புகள் தொடர்ந்து இயக்கத்தில் இருப்பவை. சமூகத்தின் கலாச்சார அரசியலில் நுண்அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தி, எதிர்கால சமூகத்தின் போக்கை நிர்ணயிப்பவை. அவற்றில் பங்கேற்பதும், அதன் கொளவரமும் முக்கியமானது என்பதே இந்த விருதை ஏற்பதற்கான எனது மனநிலை.

உலக வரலாற்றில் இலக்கியம் எப்போதம் சிறுபான்மையாக இருப்பதால்தான் அது உயிர்ப்புடன் உள்ளது. இந்த சமூகத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. இலக்கியம் இல்லாமல் சமூகம் சாத்தியமில்லை. இலக்கியத்தை சமூகம் ஒதுக்கலாம். மதிப்பற்றதாக மாற்றி வைக்கலாம். ஆனால் இலக்கியம்தான் சமூகத்தை மதிப்புள்ளதாக மாற்றுகிறது. ஒரு இலக்கியம் சரியான சமூகத்தை கடடமைப்பதை கண்காணிப்பதும், அதை சரி செய்வதும் அதன் போக்கை மாற்றியமைப்பதும் அதை வாசிப்பாளனான மக்களிடம் கொண்டு சேர்ப்பதுமான பெரும்பணியே திறனாய்வாளர்களின் பணி. அவ்வகையில் திறனாய்வாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும் விருது வழுங்கி சமூகத்தின் சரியான போக்கை கட்டமைப்பை உருவாக்கும் பணியில் “மேலும்” அறக்கட்டளை ஈடுபட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சமூகச்செயல்பாடு என்று கூறி நன்றியோடு எனது ஏற்புரையை முடிக்கிறேன்.

ஜமாலன் - 12-10-2014 (சிற்றேடு ஜனவரி-மார்ச்.2015)
             

More Recent Articles


You Might Like

Click here to safely unsubscribe from "மொழியும் நிலமும்."
Click here to view mailing archives, here to change your preferences, or here to subscribePrivacy