👇👇👇
தெற்கில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் மாத்தறை மாவட்டத்தில், NPP சார்பில் போட்டி இட்ட தமிழ் பெண் வேட்பாளர் சரொஜா சாவித்திரி போல்ராஜ், அதிகப் படியான விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகி உள்ளார்.
இன்று மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.
சாவித்திரி போல்ராஜ் NPP செயற்பாட்டு குழு உறுப்பினர். இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, மாத்தறை மாவட்டத்தில் இருந்து தெரிவான முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெறுகிறார்.
வடக்கு கிழக்கு தமிழர்களை மூளைச்சலவை செய்யும் வகையில், காலங்காலமாக JVP எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வந்த தமிழினவாதிகள், இன்று வடக்கு கிழக்கில் இருந்து தமிழ் அமைச்சர்கள் இல்லை என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.
இவர்களது கண்களுக்கு மலையக தமிழ் அமைச்சர்கள் தமிழர்களாக தெரியவில்லை. திருகோணமலையில் இருந்து ஒரு தமிழ் பிரதி அமைச்சர். அவரையும் புறக்கணிக்கிறார்கள். வடக்கில் இருந்து ஒரு தமிழ் அமைச்சர் இல்லை என்பது தான் இவர்களது முறைப்பாடு. இதைத் தான் யாழ்- வெள்ளாளிய மைய வாத சிந்தனை என்கிறோம்.
அது சரி, இதுவரை காலமும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் JVP யில் சேர விடாமல் தடுத்தவர்கள் யார்? எந்த நேரமும் JVP தொடர்பாக எதிர்மறையான கருத்துக்களை பரப்பி வந்த போலித் தமிழ்த் தேசியவாதிகள் தான். No doubt. சரி இப்பவாவது திருந்தினார்களா? தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்களா?
NEVER.
ஒருவர் அமைச்சராக வருவதற்கு கல்வித் தகைமை இருந்தால் மட்டும் போதாது. நீண்ட காலமாக கட்சியில் வேலை செய்திருக்க வேண்டும். அடித்தட்டு மக்கள் மத்தியில் வேலை செய்து அவர்களை அரசியல்மயப் படுத்திய கள அனுபவம் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, அரசியல் வழிகாட்டும் சித்தாந்தமான மார்க்சிய- லெனினிசம் பற்றிய அறிவுத் தெளிவு வேண்டும்.
இது எதுவும் இல்லாமல் வெறுமனே ஒரு தமிழனாக அல்லது முஸ்லிமாக இருப்பது மட்டுமே சிறப்புத் தகைமை ஆகாது. அப்படி எதிர்பார்ப்பது கூட ஒரு பேரினவாத மனநிலை தான்.
யாழ்ப்பாணம், சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த ஊழலை அம்பலப் படுத்திய டாக்டர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக மக்கள் போராட்டம். சாவகச்சேரியில் முன் ஒருபோதும் இல்லாத மக்கள் எழுச்சி.
அரச நிதியில் மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்குவதற்காக நடத்தப்படும் ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் நோயாளிகளை கவனிப்பதில்லை என்றும், வேண்டுமென்றே தனியார் மருத்துவமனைக்கு செல்லுமாறு ஊக்குவிக்கிறார்கள் என்றும் டாக்டர் அர்ச்சுனா சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டி இருந்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட வைத்திய அதிகாரியும்,
தனியார் மருத்துவமனை நிர்வாகிகளும் அவரை வெளியேற்ற முயற்சித்து வருகின்றனர். போலிஸ் அனுப்பி கைது செய்து வெளியேற்ற எடுத்த முயற்சி மக்கள் போராட்டம் காரணமாக தோல்வி அடைந்தது.
சாவகச்சேரி பகுதியில் பூரண கடையடைப்பு அறிவிக்கப்படடது.
இதே நேரம் "சிங்களப் பொலிஸ் எதற்கு வந்தது?" என்று கேட்டு அரசியல் செய்ய சென்ற "தீவிர தமிழ்த் தேசியவாதி" சுகாஸ் @Sugashkanu மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அங்கிருந்து வாலை சுருட்டிக் கொண்டு ஓடினார். எல்லா இடங்களிலும் இவர்களது தமிழ்த் தேசிய நாடக அரசியல் எடுபடாது என்பதை மக்கள் உணர்த்தி உள்ளனர். தமிழ் மக்கள் இனியும் இந்த கபடவேடதாரிகளை நம்பி ஏமாறத் தயாராக இல்லை.
இன்று இலங்கை முழுவதும் ஒரு Whitsle blower ஆக அறியப்படும் அர்ச்சுனா, மருத்துவ ஊழல் தொடர்பாக மேலும் பல தகவல்களை தெரிவித்து உள்ளார். குறிப்பாக தனியார்மயத்தை ஊக்குவிக்கும் இலங்கை அரசுக்கு "நல்ல பிள்ளை" பெயர் எடுப்பதில் யாழ் மருத்துவமனை நிர்வாகம் முதல் இடத்தில் இருக்கிறதாம். அரசு ஒதுக்கும் நிதியை செலவிடாமல் பெரும் பகுதியை திருப்பி அனுப்புகின்றனர். அத்துடன் நிர்வாகத்தில் பிரதேசவாதம், சாதியவாதம் தலை தூக்கி உள்ளமை மருத்துவ துறை சீர்கேடுகளுக்கு காரணமாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் இயங்கும் தீவிர தமிழ்த் தேசியவாதிகள், புலி விசுவாசிகள் யாரும் இதைப் பற்றி பேசாமல் மௌனமாக இருப்பதை அவதானிக்கலாம். இதை வைத்து இனவாத பிழைப்பு அரசியல் செய்ய முடியாது என்பது மட்டுமல்ல, உண்மையில் அவர்கள் சிங்கள அரச கைக்கூலிகள் தான் என்பதையும் நிரூபித்து வருகின்றனர்.
தமிழ்த் தேசியம் ஒரு குட்டி முதலாளிய வர்க்க அரசியல் என்பது மறுபடியும் நிரூபிக்க பட்டிருக்கிறது.
யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஊழல் தொடர்பாக தமிழ் உழைக்கும் வர்க்க மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நேரம், அவர்களது வர்க்க கோபாவேசத்தை மழுங்கடிக்கும் வகையில் so called தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் நடந்து கொள்கிறார்கள்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழரசு கட்சி தலைவர் ஸ்ரீதரன் "இது ஒரு இன அழிப்பு!" என்றார். இவர்களுக்கு இனத்தை தவிர வேறெந்த மண்ணாங்கட்டியும் தெரியாது. சும்மா எதையாவது உளற வேண்டியது.
இன்னொரு எம்.பி. கஜேந்திரன் ஊழல் செய்த டாக்டர்கள் தண்டிக்க பட வேண்டும் என்றார். ஆனால் தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறவில்லை. ஆனால், வேண்டுமென்றே அரச மருத்துவமனைகளில் நடக்கும் ஊழல்களை கண்டுகொள்ள மறுக்கும் அரசை கண்டிக்கவில்லை! என்னே அதிசயம்! இந்த விஷயத்தில் அரசுக்கு முட்டுக் கொடுப்பது தவறாக தெரியவில்லை. இவர்கள் யாரும் போராட்டம் நடத்திய மக்களை சென்று சந்திக்கவில்லை.
இவர்களை விட, புலிகளின் பெயரால் ஜிகாத் (புனிதப் போர்) நடத்தும் ஏக இறைவனின் போராளிகள் சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக வாயே திறக்கவில்லை. தானடா விட்டாலும் சதை ஆடும். சிங்கள அரசுக்கு நெருக்கடி வந்தால் புலி அரசியலை கையில் எடுப்பார்கள். இந்த விஷயத்திலும் "புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?" என்று புறநானூறு பாடினார்கள். அதாவது சாவகச்சேரி மருத்துவமனை ஊழலை வெளிக் கொணர்ந்த டாக்டர் அர்ச்சுனாவின் தந்தை முன்பு புலிகளின் காவல்துறையில் இருந்தாராம். அந்த பெருமை மட்டும் அவர்களுக்கு போதும். தமிழ் மக்கள் எக்கேடு கெட்டால் இவர்களுக்கு என்ன வந்தது?
சரி, தனியார் மருத்துவமனை தொடர்பாக இவர்களது நிலைப்பாடு என்ன?
முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அவர்களது நிர்வாகத்தில் இயங்கியது மருத்துவமனையில் பணியாற்றிய so called "தமிழ்த் தேசிய மருத்துவர்கள்", தற்போது தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்கிறார்கள். தமிழ்த்தேசியர்கள் நோக்கம் பணக்காரர்களுக்கு சேவை செய்வது என்பதாக மாறி விட்டது. இது தான் குட்டி முதலாளிய அரசியல் சிந்தனை.
"காசு இருந்தால் மருத்துவம். இல்லை என்றால் வருத்துவோம்!" - இது தானே மருத்துவ மாபியாவின் கொள்கை? இதற்கு சிங்கள பேரினவாத அரசும் உடந்தை. தமிழ்த் தேசியவாதிகள் கூட்டுக் களவாணிகள்.
"இலங்கையில் 1971 ம் ஆண்டு 30 நாடுகள் சேர்ந்து அழித்த ஜேவிபி கிளர்ச்சி!"*
Revolution in the Air, Sixties Radicals turn to Lenin, Mao and Che நூலில் எழுதப் பட்டுள்ள வரலாற்றுக் குறிப்பு.
அந்த காலகட்டத்தில் "எதிரி நாடுகளாக" கருதப்பட்ட அமெரிக்கா, பிரித்தானியா, சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய உலக வல்லரசு நாடுகள், இலங்கையில் ஒரு சோஷலிச புரட்சியை நடத்த கிளம்பிய ஜேவிபி இயக்கத்தை ஒன்று சேர்ந்து ஒடுக்கின. சிறிலங்கா அரசுக்கு வேண்டிய உதவிகளை வழங்கின.
இந்த புரிதல் தமிழர்களிடம் இருந்திருந்தால் "2009 ஆண்டு 30 நாடுகள் சேர்ந்து இனவழிப்பு செய்தான..." என்று சொல்ல வேண்டிய தேவை வந்திருக்காது. இவர்கள் ஒருநாளும் வரலாற்றில் இருந்து எந்தப் பாடமும் கற்றுக் கொள்ள மாட்டார்கள்.
1971ம் ஆண்டு ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி இருந்தன.
இந்த வல்லரசுகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு காரணங்களுக்காக இலங்கை அரசை ஆதரித்தன:
1. இந்தியா எப்போதும் தன்னை இலங்கையின் பாதுகாவலனாக கருதி வந்துள்ளது. அங்கு நடக்கும் அரச கவிழ்ப்பு, மார்க்சிய புரட்சி எல்லாம் இந்தியாவுக்கும் ஆபத்தானது.
2. அமெரிக்காவுக்கு இலங்கையில் கம்யூனிசத்தை அழிக்க வேண்டும் என்ற வெறி காரணம்.
3. பிரித்தானியாவை பொறுத்தவரையில் வழமையான கம்யூனிச எதிர்ப்புடன், முன்னாள் காலனிய நாடு என்ற கூடுதல் அக்கறை.
4. சோவியத் ரஷ்யா மேற்குலகுடன் முரண்பட விரும்பவில்லை. அதனால் சிறிமாவோ தலைமையிலான சமூக- ஜனநாயக அரசை ஆதரித்தது.
4. சீனாவை பொறுத்தவரையில் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு முக்கியம். அவர்கள் ஜேவிபி கிளர்ச்சியை ஆதரிக்கவில்லை. அத்துடன் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒரு நட்பு நாட்டை இழக்க விரும்பவில்லை.
இது குறித்து ஒரு தடவை மலேசியாவை சேர்ந்த ஒரு மாவோயிஸ்டுடன் உரையாடிய பொழுது, "சீனாவின் அன்றைய நிலைப்பாடு தவறு தான்" என்பதை ஒத்துக் கொண்டார். அவரும் ஒரு தமிழர் தான்.
ஒரு காலத்தில் சீனா, இந்தியா ஒன்று சேர்ந்து தம்மை அழித்தார்கள் என்பதற்காக, ஜேவிபி எப்போதும் சீன- இந்திய எதிர்ப்பு வன்மத்துடன் அலையவில்லை. இந்த விஷயத்தில் தமிழ்த் தேசியவாதிகள் ஜேவிபி இடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
*நாம் வரலாற்றில் இருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்வதில்லை.
புதிய ஜனநாயகம் இதழில் இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை!
ஜேவிபி இந்திய- இலங்கை முதலாளிய ஆளும் வர்க்க நலன்களுக்கு விலை போவதாக சொல்வதில் ஒரு நியாயம் இருக்கலாம். அதே நேரத்தில், அதே ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழல் ஊடகங்கள் ஜேவிபி தொடர்பாக செய்யும் பொய் பிரச்சாரங்களை ஒரு உழைக்கும் வர்க்க பிரதிநிதி நம்புவது அநியாயம்.
"ஜேவிபி, 1980 களில் நிகழ்த்திய இனப் படுகொலை வன்முறைகளுக்கு மன்னிப்பு தெரிவிக்குமா?" என்று சிங்கள பேரினவாத ஆளும் வர்க்க ஊடகங்கள் விவாதங்களை கட்டமைத்தால் அதை புதிய ஜனநாயகத்தில் அப்படியே போடுவீர்களா? 1988-89 இனப் படுகொலை பழியை ஜேவிபி மீது போடுவது அபத்தம் மாத்திரம் அல்ல, ஆளும் வர்க்கத்தின் பொய்ப் பிரச்சாரத்தை அப்படியே வாந்தி எடுப்பதும் ஆகும்.
"LTTE, 2009 ல் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு மன்னிப்பு கேட்குமா?" என்று ஊடகங்கள் ஒரு விவாதத்தை கட்டமைப்பது சரியா? இது அரச படைகள் செய்த படுகொலைகளை மூடி மறைப்பது ஆகாதா? 2009 இனப் படுகொலைக்கு LTTE மட்டுமே காரணம் என்ற மாதிரி கட்டமைத்து ஒரு கேள்வி கேட்கப் பட்டால் அதற்கு தமிழர்களிடம் இருந்து எப்படியான எதிர்வினைகள் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும். அது எப்படி இவர்களால் ஜேவிபி என்றால் மட்டும் உடனே அரச ஆதரவு நிலைப்பாடு எடுக்க முடிகிறது? எனக்கு புரியவில்லை.
இந்தக் கட்டுரையில் இன்னொரு இடத்தில் "1983 ஜூலையில் நடந்த ஈழ மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளில் ஜேவிபி முன் நின்று செயற் பட்டது." என்று அவதூறு புனைந்து அபாண்டமான பழி சுமத்த படுகிறது. இது படு அபத்தம் மட்டுமல்ல. ஜூலை படுகொலைகளை முன் நின்று நடத்திய, உண்மையான குற்றவாளிகளான, அன்று ஆட்சியில் இருந்த வலதுசாரி- இனவாத UNP அரசாங்கத்திற்கு வெள்ளை அடிக்கும் வேலை. நிச்சயமாக, புதிய ஜனநாயகத்திடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை!
"1983 இனக் கலவரத்தை ஜேவிபி நடத்தியது!" என்று அன்றைய ஜே. ஆர். அரசாங்கம் செய்த பொய் பிரச்சாரத்தை இந்த கட்டுரையாளர் உண்மை என்று நம்பி இருக்கிறார். இலங்கையில் அன்று அதை யாரும் நம்பவில்லை. சிங்களவர் மட்டுமல்ல தமிழரும் நம்பவில்லை. அன்றிருந்த ஜே. ஆர். அரசாங்கம் இதை ஒரு சாட்டாக வைத்து, ஜேவிபி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை தடை செய்தது. அதற்கு சொல்லப்பட்ட காரணம் அது. இப்படிப் பார்ப்போம். இந்தியாவில் மோடி அரசாங்கம் குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டி புதிய ஜனநாயகம் மற்றும் பல இந்தியா கம்யூனிஸ்ட் கட்சிகளை தடை செய்தால் அதை நாங்கள் உண்மை என்று நம்ப வேண்டுமா?
ஆளும் வர்க்க நலன் சார்ந்த சிங்கள ஊடகங்கள் மட்டுமல்ல, தமிழ் ஊடகங்கள் கூட இனவாத கண்ணோட்டத்தில் திரிபு படுத்தி செய்தி தெரிவிப்பது வழமையாக நடந்து கொண்டிருக்கிறது. இன்று ரணில் அரசாங்க சார்பு ஊடகங்கள் ஜேவிபி யை தமிழர்களுக்கு எதிரான கட்சியாக கட்டமைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். அதையே தமிழ் ஊடகங்களும் செய்கின்றன. ஆனால் தமிழ் மக்கள் அதை எல்லாம் நம்புவதாக கட்டுரையாளர் நினைத்துக் கொள்வது சுத்த அபத்தம். எல்லோரையும் மூளைச் சலவை செய்ய முடியாது. சுய புத்தியில் சிந்திக்கும் தமிழர்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்கள் யாரும் ஜேவிபி யை எதிரியாக கருதவில்லை.
1988-89 இனப்படுகொலயை ஒவ்வொரு வருடமும் ஜேவிபி நினைவு கூர்ந்து வருகிறது. அன்றைய காலகட்டத்தில் ஜேவிபி நடத்திய கூட்டங்களில் பங்கு பற்றிய ஒரே காரணத்திற்காக ஒட்டு மொத்த கிராம மக்களும் அரச படையினரால் படுகொலை செய்யப் பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அதிலும் 18 வயதை அடையாத பாடசாலை மாணவர்கள் கூட ஈவிரக்கமின்றி கொலை செய்யப் பட்டுள்ளனர். இணையத்தில் சூரியகந்த புதை குழி என்று தேடிப் பாருங்கள். இது பிற்காலத்தில் தற்செயலாக கண்டுபிடிக்க பட்டது. இதை விட இன்னமும் தோண்டப் படாத மனித புதை குழிகள் ஏராளம் உள்ளன.
1988-89 இனப் படுகொலைக்கு நீதி கிடைத்து விட்டதா? அந்தப் படுகொலைகளுக்கு இதுவரை யார் பொறுப்பு ஏற்றார்கள்? எத்தனை பேர் தண்டிக்க பட்டனர்? ஒன்றுமே இல்லை. காரணம் என்ன? ஒரு சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களான ஏழைகள், உழைப்பாளிகள், தாழ்த்தப்பட்ட சாதியினர் கொன்று குவிக்கப் பட்டால் அது குறித்து யாருக்கும் அக்கறை இல்லை. அதனால் தான் இன்று வரையில் முதலாளித்துவ ஊடகங்கள் இதைப் பற்றி பேச மறுக்கின்றன. மேற்கத்திய, சர்வதேச நாடுகள் பாராமுகமாக உள்ளன. ஆனால் வர்க்க அரசியல் பேசும் புதிய ஜனநாயகம் இந்த உண்மைகளை கண்டு கொள்ளாமல் கடந்து செல்வது கவலை அளிக்கிறது.