கர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக? தந்தை பெரியார்இப்போது நாம் எடுத்துக் ...

Click here to read this mailing online.

Your email updates, powered by FeedBlitz

 
Here is a sample subscription for you. Click here to start your FREE subscription


  1. கர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக?
  2. பண்பாடற்ற பார்ப்பனர்களை அடையாளம் காணுங்கள்!
  3. தந்தை பெரியார் பிறந்த நாள் செய்தி
  4. கருப்பா - காவியா?
  5. நாயன்மார் முத்திபெற்ற விதம் - பெரியார்
  6. More Recent Articles

கர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக?


தந்தை பெரியார்
இப்போது நாம் எடுத்துக் கொண்டிருக்கிற முயற்சி, கோயிலில் கர்ப்பக்கிருகம் இருக்கிற இடத்திலே நீ சூத்திரன்,- இழிசாதிக்காரன், நீ உள்ளே நுழையக்கூடாது என்று பார்ப்பான் நம்மை இழிவுபடுத்தி வைத்திருக்கின்றதை மாற்ற வேண்டும் என்று போராட இருக்கிறோம். இதற்கு முன் தெருவிலே மனிதனை நடக்கக் கூடாது புனிதம் கெட்டுவிடும் என்று சொன்னான்; குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்று வைத்திருந்தான்; ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு ஜாதியார் கோயிலுக்கும் போகக்கூடாது என்று வைத்திருந்தான், அதுபோல, சாப்பிடும் பொது இடங்களில் பார்ப்பனருக்கு வேறு இடம், நமக்கு வேறு இடம் என்று வைத்திருந்தான்; இதையெல்லாம் மாற்றி விட்டோம்.
அதனால் ஒன்றும் புனிதம் கெட்டுவிடவில்லை. எந்த மனிதனின் மனமும் புண்படவில்லை. மதம், சம்பிரதாயம் அழிந்து பாழாகி விடவில்லை. மிகப் பெரிய புண்ணிய ஸ்தலங்களாகக் கருதப்படும் காசி, ஜெகநாத், பண்டரிபுரம் ஆகிய இடங்களிலிருக்கிற கோயில்களில் உள்ள சாமி சிலைகளை யார் வேண்டுமானாலும் தொட்டு வணங்கலாம் என்றிருக்கிறது. அதுபோல இங்கேயும் கர்ப்பகிரகத்திற்கு வெளியே இருக்கிற உருபரிவாரங்களை யார் வேண்டுமானாலும் தொடலாம். அதே சிலை கர்ப்பகிரகத்தில் இல்லாமல் வெளியே இருந்தால் நாய்கூட நக்கிவிட்டுச் செல்லலாம். அதனால் அந்தச் சிலையின் புனிதம் ஒன்றும் கெட்டு விடுவதில்லை. கர்ப்பக்கிரகத்திற்குள் இருப்பதைத் தொட்டால் மட்டும் எப்படிப் புனிதம் கெட்டுவிடும்? வெளியே யிருக்கிற சிலைக்கு இல்லாத புனிதம் அதற்கு மட்டும் எப்படி வந்தது என்று கேட்கின்றேன்? பார்ப்பான் ஆக்கிய சோற்றை நம் கண்ணால் பார்த்தால் அதைக் கீழே கொட்டிவிடுவான். இன்று நம்முடன் வந்து உட்கார்ந்தே சாப்பிடுகின்றான்,- நாம் சமைப்பதைச் சாப்பிடுகின்றான்.
இப்படி உண்பதில்- பழகுவதில் எல்லாம் ஒன்றான பின் எல்லோருக்கும் பொதுவான கர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் இந்தப் பேதம் எதற்காக என்று கேட்கின்றேன்? சாதி இழிவை, சூத்திரத் தன்மையை நிலைநிறுத்த அல்லாமல் வேறு எதற்காக? வேறு என்ன அவசியத்திற்காக இங்கு மட்டும் நாம்  போகக் கூடாது என்பது என்று நம் மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும். சிலர் நகை இருக்கிறது அதனால் தான் எல்லோரும் வரக்கூடாது என்று சமாதானம் சொல்கிறார்கள். உன் சாமிக்கு  நகை போட்டிருக்கிறாய் என்பதற்காக நான் சூத்திரன் என்பதை ஒப்புக் கொள்வதா? இடம் சிறிதாக இருக்கிறது, அதிகம் பேர் உள்ளே போக முடியாது என்றால், ஒவ்வொருவராகச் சென்று தொட்டுக் கும்பிட்டு வருகிறார்கள். நகை இருக்கிறது என்றால் இரண்டு போலீசைப் போட்டுப் பாதுகாத்துக் கொள். இவற்றிற்காக நாங்கள் எங்கள் மானத்தை இழக்கத் தயாராக இல்லை.
மொழிக்காகப் போராட்டம் என்கின்றார்கள். இன்றைக்கும் அனேகக் கோயிலில் பார்ப்பான் சமஸ்கிருதம் சொல்லிக்கொண்டு பூசை செய்கிறான். எதற்காகத் தமிழ்நாட்டில் இப்படி நடக்க வேண்டும் என்று இதுவரை எவனுமே கேட்க வில்லை? இந்த அரசாங்கம்- நம் அரசாங்கம் சும்மாவிட்டுவிடும் என்று கருதவில்லை. அவர்கள் கடமையை அவர்கள் செய்வார்கள். அதுபற்றி நாம் அரசாங்கத்தைக் குறை கூறப் போவதில்லை.
காந்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தனிக் கிணறு, தனிக்கோயில், தனி பள்ளிக்கூடம், தனிக் குளம் வெட்டுவது என்று அதற்காக ஒரு இலட்சத்திற்கும் மேல் பணம் ஒதுக்கி அந்தப் பணத்தை என்னிடம் கொடுத்தார்கள். நான் ஆதிதிராவிடர் மக்களுக்குத் தனியாகப்  பள்ளிக்கூடம் கிணறு கட்டுவதை விரும்பவில்லை. அதை அப்படியே திருப்பிக் கொடுத்து விட்டேன்.
நாம் கர்ப்பக்கிருகத்திற்குள் போக வேண்டுமென்பது கடவுள் நம்பிக்கைக்காக, பக்திக்காக, புண்ணியம் சேர்ப்பதற்காக, போக வில்லை; அதில் உள்ள அவமானத்தை நீக்க வேண்டும் என்பதற்காகப் போகிறோம். திறந்து விட்டுவிட்டால் அதனால் என்ன பலன் என்று கேட்பீர்கள். சாமிக்கு இருக்கிற யோக்கியதையே போய் விடும். பார்ப்பானுக்கிருக்கிற உயர்சாதித் தன்மையும் போய் விடும். பார்ப்பானே வெளியே வந்து அங்குக் கடவுள் இல்லை, கல்தான் இருக்கிறது என்று சொல்வான்.
உனக்குத் தான் சாமி இல்லையே- நீ ஏன் அங்கு போகிறாய் என்று கேட்கிறான். மானம் இருப்பதால் போகிறேன். மானம் இல்லாத தால், அறிவு இல்லாததால், இழிவைப்பற்றிச் சிந்திக்காததால் நீ வெளியே நிற்கிறாய்-  என்று சொல்வேன். நாம் போவதற்கு உரிமை வந்துவிட்டால், பிறகு பூசை செய்கிற உரிமை நமக்குத் தானாகவே வந்து விடும்.
மொழிக்காகச் சத்தம் போடுகிறாய்; கோயிலிலே சமஸ்கிருதத்திலே மந்திரம் சொல்கின்றான். அதுபற்றி எவனுமே சிந்திப்பது கிடையாது. தமிழில் சொல்லக் கூடாது என்கின்ற ஏற்பாடு பார்ப்பானாகச் செய்து கொண்டதே தவிர சாஸ்திரத்தில் கிடையாது.
இதெல்லாம் வளர்ந்தால் மனிதனுக்கு இருக்கிற மூடநம்பிக்கைப் போய்விடும்; பூச்சாண்டி போய்விடும்.
சமுதாயத் துறைக்காக இந்த நாட்டிலே என்னைத் தவிர எவனய்யா பாடுபட்டான்? பந்தயம் கட்டிக் கேட்கிறேன். எவன் பாடுபட்டான்?
நீங்களெல்லாம் மதம் போச்சு, கடவுள் போச்சு என்று பயப்படாதீர்கள்; கடவுள் உண்மையில் இருந்தால் அதை ஒழிக்க யாராலும் முடியாது. அது போன்றுதான் இந்து மதம் என்பதும், இல்லாத ஒரு கற்பனையாகும். என்று தெளிவாக எடுத்துவிளக்கி இழிவு நீக்கிக் கிளர்ச்சியில் எல்லா மக்களும் பங்கேற்க முன்வர வேண்டும்.

                         -----------------------------------26.10.1969 அன்று வேலாயுதம்பாளையம் நாகம்மையார் திடலில் ஈ.வெ.ரா.பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு "விடுதலை", 7.11.1969
    

பண்பாடற்ற பார்ப்பனர்களை அடையாளம் காணுங்கள்!

பண்பாடற்ற பார்ப்பனர்களை அடையாளம் காணுங்கள், தமிழர்களே! 'துக்ளக்'கைக் "கவனியுங்கள்!"


விஷமம் - பூணூல்தனம் - இவற்றைச் சன்னமாக நுழைப் பது எப்படி என்பதைத் 'துக்ளக்'கில் தான் பாடம் கற்க வேண்டும். குறிப்பாக அதன் கேள்வி - பதில் பகுதிகளில் அக்ரகாரத்தின் ஊத்தை நாற்றத்தின் மீது வாசனைத் திரவி யங்கள் பூசப்பட்டு இருப்பதை அறிய முடியும். எடுத்துக்காட் டாக இவ்வார (26.9.2018) 'துக்ளக்'கை எடுத்துக் கொள்ளலாம்.
கேள்வி: காலில் விழ வேண்டாம், பேனர் வைக்க வேண்டாம் - என்று தன் கட்சியினருக்கு அறிவுரை கூறும் மு.க. ஸ்டாலின், பொது மக்களின் போக்குவரத்திற்கு இடை யூறாக ஊர்வலமோ, பொதுக் கூட்டமோ நடத்த வேண்டாம் என்று சொல்வதில்லையே, ஏன்?
பதில்: பந்த், மறியல், உண்ணாவிரதம், ஊர்வலம், பொதுக் கூட்டம் போன்றவற்றின் மூலமாக மக்களுக்கு இடையூறு செய்தால்தானே, கட்சி இருப்பது அவர்களுக்கு நினைவு வரும்.
கேள்வியே  தன் முரண்பாடு கொண்டது  - காலில் விழு வதையும், பேனர் வைப்பதையும் கிண்டல் செய்து வந்த வர்கள், அவற்றைத் தவிர்க்குமாறு ஒரு கட்சியின் தலைவர் சொல்லும்போது யோக்கியமான புத்தியிருந்தால் அதனை வரவேற்கத்தானே செய்ய வேண்டும். அதோடு கொண்டு போய் பொதுக் கூட்டம் போடுவது, ஊர்வலம் நடத்துவதை இணைப்பது சற்றும் பொருந்துமா?
பொதுக் கூட்டங்களும், ஊர்வலங்களும் பொதுவாக நம் நாட்டில் அவாளுக்கு அனுகூலமாக இருக்காதே! சமூகநீதிக் காகவும் பகுத்தறிவுக்காகவும், மொழி உரிமைக்காகவும் இவற்றை நடத்தினால், அவாள் வீட்டில் இடி விழுந்ததாகத் தானே இருக்கும். அதனால்தான் இப்படி இடக்கு முடக்காக எழுதுவது.
சரி... விநாயகர் ஊர்வலம் நடத்திக் கலவரம் செய் கிறார்களே, தேரோட்டம் நடத்தி போக்குவரத்துக்குப் பெரும் இடையூறுகளைச் செய்து கொண்டு இருக்கிறார்களே, பிரமோத்ஸவம் என்று சொல்லி எத்தனை நாள்கள் அல்லோல கல்லோலம் செய்கிறார்கள். அதைப்பற்றி எல்லாம் மூச்சு விடச் சொல்லுங்கள் பார்க்கலாம். மயிலாப்பூரில், அறுபத்து மூவர் விழா என்று எத்தனை நாள் 'கழுதைக் கூத்து' நடக்கிறது.... போக்குவரத்துக்கு இடைஞ்சல் கொஞ்சமா நஞ்சமா? எழுதுமா  'துக்ளக்'?
அரசுக்குச் சொந்தமான இடங்களில் எல்லாம் அத்துமீறிக் கோயில் கட்டி பொது மக்களின் நடைபாதைகளை எல்லாம் ஆக்கிரமிப்பு நடந்து கொண்டுள்ளதே - ஒரே ஒரு வரி இதுகுறித்து எல்லாம் எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம் - எழுத மாட்டார்கள் - மூச்சுவிட மாட்டார்கள் - ஏன் - அந்தக் குழவிக் கல்லுதான் அவாளின் மூலச் சொத்து - என்ன புரிகிறதோ!
இன்னொரு கேள்வி பதில்
கேள்வி: 'தி.மு.க.வினர் மு.க. ஸ்டாலின் காலில் விழுவதைத் தவிர்த்து, சால்வைகளுக்குப் பதிலாக புத்தகங்களை வழங்க வேண்டும்' - என்று தி.மு.க. தலைமை வலியுறுத்தியுள்ளது குறித்து?
பதில்: சால்வைகளை இஸ்திரி போட்டு புதிய விலைக்கே விற்று விடலாம். புதிய புத்தகங்களைக்கூட பழைய புத்தக விலைக்குத்தான் விற்க முடியும். இருந்தும் ஏன் சால்வையை புத்தகமாக மாற்றினார்கள் என்று தெரியவில்லை.
இது ஒரு பதிலாம் - சால்வைகளைத் தவிர்த்துப் புத்தகங் களை வழங்குங்கள் என்பது அறிவார்ந்த செயல் என்பதுகூட  இந்த அம்பிப் பையன்களுக்குத் தெரியாதா? அந்த சால் வைகள் எதற்குப் பயன்படும்? புத்தகங்கள் வாசிப்பு ஆர்வத் தையும், கருத்துகளைத் தெரிந்து கொள்ளவும் பயன்படும். அது கூட அவாளுக்குக் குமட்டலாக இருக்கும்.
காரணம் இந்த நூல்கள் எல்லாம் பெரும்பாலும் நூல்களின் ஆதிக்கத்தை அறுக்கும் ஆயுதங்களாக இருக்குமே அதனால் தான்! இதுவே இராமாயணமாகவும், மகாபாரதமாகவும், புராணக் குப்பைகளாகவும் இருந்தால் அப்படி எழுது வார்களா?
கல்யாண வீட்டுக்கும், கருமாதிகளுக்கும் செல்லும் புரோகிதப் பார்ப்பனர்கள் பச்சையான காய்கறிகளையும், பொருட்களையும் அடித்துக் கொண்டு வருகிறார்களே அவைகூட மளிகைக் கடைகளில் விற்பதற்காகவா?
சீன யுத்தம் நடந்த போது இந்திய தரப்பில் செத்த இராணுவ வீரர்கள் எத்தனைப் பேர் என்று ஆச்சாரியார் (ராஜாஜி) கேட்டார். பொதுவாக யுத்த காலங்களில் இதுபோல செய்திகளை எந்த நாடும் வெளியிடுவது கிடையாது - அது நாட்டு மக்கள் மத்தியிலே பீதியை ஏற்படுத்தி விடும் என்பதால்!
இந்தியாவின் கவர்னர் ஜெனரல் பதவி வரை வகித்த ஆச்சாரியாருக்கு இது கூடத் தெரியாத பூஜ்ஜியமா? அப்பொழுதுதான் தந்தை பெரியார் நறுக்கென்று ஒரு கேள்வியைக் கேட்டார்.
ஏன் ஆச்சாரியார் கேட்கிறார் தெரியுமா? செத்தவர்களின் விவரங்கள் தெரிந்தால் அந்த வீடுகளுக்ªல்லாம் கருமாந்திரக் காரியங்களைச் செய்ய அவாள் ஆத்துப் புரோகிதர்களுக்குச் 'சான்ஸ்' கிடைக்கும் அல்லவா என்று கூறினாரே, அது மாதிரி பதில்கள் தான் இந்தச் சிண்டுகளுக்கு உரைக்கும்.
கேள்வி: தமிழகம் எங்கே இருக்கிறது?
பதில்மெரினாவில் இரண்டு நினைவிடங்களுக்கு நடுவில் நின்று கொண்டு, எங்கு செல்வது என்று தெரியாமல் திண்டாடுகிறது தமிழகம் - இது ஒரு பதில்.
கேட்ட கேள்வி என்ன? அதற்குச் சொல்லப்படும் பதில் என்ன?
பார்ப்பனர்களின் நினைப்பெல்லாம் பார்ப்பனர் அல்லாத மக்களை அவர்களின் தலைவர்களைப் பற்றிதான்.
சென்னைக் கடற்கரையில் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடங்கள் இருக்கிறதாம். அதைப் பொறுக்க முடியவில்லை இந்த உஞ்சி விருத்திக் கும்பலுக்கு.
அண்ணாவும், கலைஞரும் மறைந்து மண்ணுக்குள் போனாலும் இந்த மடி சஞ்சிக் கூட்டத்தை அன்றாடம் உலுக்கிக் கொண்டே இருக்கிறார்களே.
இந்தத் தலைவர்களும், இவர்களுக்கெல்லாம் தலைவரான பெரியாரும் செய்த வேலைகளால் அல்லவா - உச்சிக் குடுமியோடு வெளியில் நடமாட முடியவில்லை - பூணூல் மேனியோடு பயணம் செய்ய முடியவில்லை. ஒரு காலத்தில் இப்படியெல்லாம் சென்றால் 'வாங்க சாமி' என்று கும்பிட்டு ஒதுங்கிச் சென்ற கூட்டம், இன்று கேலி செய்யும் நிலைக்கு ஆளாகி விட்டோமே என்ற ஆத்திரம் அவாளை இப்படியெல்லாம் 'அர்ச்சனை' செய்ய வைக்கிறது.
கேள்வி: 'மெரினா கடற்கரையில் கூட்டம், போராட்டம் நடத்த அனுமதியில்லை' என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பற்றி?
பதில்: மெரினா கடற்கரையில் அமைதி வேண்டும் என்பதற்காகத் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றத்துக்கு நன்றி. ஆனால், ஏன் நீதிமன்றம் அங்கு மயான அமைதி வேண்டும் என்று நினைக்கிறது என்று தெரியவில்லை.
- இப்படியொரு பதில்.
"மயான அமைதி" இந்த வார்த்தையின் பின்னணியில் என்ன இருக்கிறது என்று புரிகிறதா?
அண்ணா, கலைஞர் உடல்கள் அங்கே புதைக்கப் பட்டுள்ளதால் அது மயானமாம் - அதாவது இடுகாடாம். அதற்கு கலைஞரை அங்கே அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்து விட்டதாம் - அந்த ஆத்திரத்தைத் தீர்த் துக் கொள்ளத்தான் இப்படிப்பட்ட வார்த்தைப் பிரயோகம்!
கோடானு கோடி மக்களின் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய  தலைவர்களைக் கொச்சைப்படுத்தும் வேலையில் இறங்கி அவர்களைச் சீண்டுவது நல்லதா?
இதே இடத்தில் பார்ப்பனப் பிரமுகர்களை அடக்கம் செய்திருந்தால் இப்படி எழுதுவார்களா? ஏன் ஜெயலலிதாவை இதே கடற்கரையில் அடக்கம் செய்தபோது 'துக்ளக்' இப்படி எழுதியதா?


பார்ப்பனர் அல்லாத மக்களே, தொண்டர்களே, இந்தப் பார்ப்பனர்களை அடையாளம் காணுங்கள்!

   -----------------------மின்சாரம்  அவர்கள் 20-09-2018 ‘விடுதலை’ யில் எழுதிய கட்டுரை 
    

தந்தை பெரியார் பிறந்த நாள் செய்தி

தந்தை பெரியார் பிறந்த நாள் செய்தி


எனக்கு (நான் பிறந்து) நாளது செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதியோடு, 93 ஆண்டு முடிவ டைந்து, 94-ஆம் ஆண்டு முதல் நாள் தோன்றி விட்டது.
93 ஆண்டு என்றால், நான் பிறந்து, மாதங்களில் 1116 மாதங்கள், நாட்களில் 34,045 நாட்கள், பிறை களில் (அமாவாசைகளும்) 1,635 ஏற்பட்டு மறைந்து விட்டன. இனிமேலும் எத்தனை காலத்துக்கு வாழ்ந்தாலும், வாழ்வில் தேய்மானம்தான் காண முடியுமே ஒழிய வளர்ச்சி காண்பது என்பது (இயற்கையில்) முடியாத காரியமேயாகும்.
நினைத்தேன்- -& சொன்னேன் -& நடத்திக் காட்டினேன்
என் வாழ்நாளில் நான், மற்றவர் (அனேகர்) கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர்கள் கருத்து என்பவைகளில், யாரும் நினைக்காததும், நினைத் தாலும் வெளியில் சொல்ல பயப்படுவதும், துணிந்து சொன்னாலும் செய்கையில் நடவாததும் நடத்திக்காட்ட முடியாததுமான காரியத்தை, எளிதாய் நினைத்து, வெளியில் எடுத்துச் சொல்லி (பிரசாரம் செய்து) காரியத்திலும் நடந்து வந்த தோடு, ஓரளவுக்கு மற்றவர்களுக்கும் தெரியும்படி-விளங்கும்படி, ஓரளவுக்கு நடத்திக் காட்டியும் வந்திருக்கிறேன்,
இந்த நிலை உலகெல்லாம் பரவவேண்டும் என்ற எண்ணம் கொண்டு அதற்காக வாழ்கிறேன், என்ற எண்ணத்தில் இருந்து வருகிறேன். அப்படிப் பட்ட காரியம் (எண்ணம்) என்னவென்றால், தெய்வம் இல்லை, தெய்வசக்தி என்பதாக எதுவும் இல்லை, மனிதத்தன்மைக்கு மேற்பட்ட தெய்வ சக்தி - தெய்வீகத் தன்மை என்பதாக எதுவுமில்லை; அப்படிப்பட்ட தெய்வீகத் தனம் கொண்டவர்கள் என்பதாக யாருமே இல்லை ; அப்படிப்பட்ட காரியம் என்பதாகவும் எதுவுமே இல்லை என்றும் திண்ணமாய்க் கருதி, உறுதியான பணியாற்றியும் வந்திருக்கிறேன் - வருகிறேன்.
இந்த எனது நிலையால், எனது 93 ஆண்டு வாழ்நாளில் எனக்கு யாதொரு குறைவும், சங்கடமும், மனக்குறைவோ, அதிருப்தியோகூட ஏற்பட்டதேயில்லை. மேற்கண்ட எல்லா காரியங் களிலும், மற்றவர்கள் எளிதில் பெற முடியாத அநேக ஏற்றங்களை சாதாரணமாகப் பெற்றிருக் கிறேன்; மக்களால் நல்ல அளவுக்கு மதிக்கப்பட்டும், பாராட்டப்பட்டும், விரும்பப்பட்டும், போற்றப்பட்டும் வந்திருக்கிறேன். இதனால் உலகுக்கு-மக்க ளுக்கு யாதொரு கெடுதியும் ஏற்பட்டதில்லை என்ப தோடு நாட்டுக்கும், மக்களுக்கும், பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் யாவருக்குமே நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்பட்டு வருகின்றன என்றே சொல்லலாம். நோயும் சாவும் மட்டும் ஏராளம் நமது கருத்து வெளியீடும், பிரசாரமும் துவக்கப்பட்ட காலத்தில்,
நமது மக்களின் சராசரி ஆயுள் (வாழ்நாள்) பத்து ஆண் டே யாகும். கல்வியில் நமது மக்கள் 100க்கு 8 பேர், 10பேர் என எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் ஆவார்கள். ஏராளமான நோய் நலிவுகள்; அவற்றுள் பரிகாரம், சவுக்கியம் செய்ய முடியாத நோய்கள் அதிகம். காலரா (வாந்தி பேதி) வந்தால் 100க்கு 90 பேர் சாவார்கள்; பிளேக் வந்தால் 100க்கு 100ம் சாவார்கள். இருமல் (க்ஷயம்) வந்தால் 100க்கு 80 பேர் சாவார்கள். அம்மை (வைசூரி) வந்தால் 100க்கு 50 பேர்களுக்குமேல் சாவார்கள். தொத்து நோய்களும் பல- குழந்தைச் சாவுகளும் ஏராளம். கர்ப்பஸ்திரீகள் சாவுகளும் ஏராளம் இருந்தன. இதற்கு ஏற்ப ஏழ்மையும் கீழ்த்தரமான வாழ்க்கை நிலையும் இருந்து வந்தன,
அரசியலில் அந்நிய ஆதிக்கம், பார்ப்பன ஆதிக்கம் தலைவிரித்தாடின. அது போலவே உத்தியோகத் துறையிலும் பார்ப்பன மயமும், முன்னேற்ற வகுப்பார் ஆதிக்கமும் இருந்து வந்தன. முதலாளிகள் ஆதிக்கமும், எஜமான் - அடிமைத் தன்மையும், இயற்கை என்று சொல்லும் தன்மையில் தாண்டவமாடின. செல்வநிலையோ, ஒரு லட்சம் என்பதுதான் உயர்ந்த நிலை. 10 லட்சம் என்பது மிக மிக உயர்ந்த நிலையாய் இருந்தது. மற்றும் எவ்வளவோ கீழ் நிலைக்கு ஆளாகியி ருந்தது மாத்திரமல்லாமல், அந்நிலைபற்றி வெட்கப் படாமலும், கவலைப்படாமலும் வாழ்ந்து வந்தோம்.
"எல்லாம் கடவுள் செயல்; நம்மால் ஆவதில்லை"
இப்படிப்பட்ட நிலையில், இந்த நிலைபற்றி யாருமே கவலைப்படாமல்-இவற்றின் விளைவு பற்றி யாருமே கவலைப்படாமல், "எல்லாம் கடவுள் செயல். நம்மாலாவது ஒன்றுமே இல்லை" என்று கருதி, நிம்மதியுடன் மக்கள் இருந்த காலத்தில், நான் ஒருவன் மாத்திரமே தீவிரமாய் சிந்தித்து, இந்த நிலைக்குக் காரணம் நமது முட்டாள்தனமும், இதுவரை சிந்திக்காததுமேதான் என்று கருதி, துணிந்து கடவுளையும், மதத்தையும், சாஸ்திரங்களையும், முன்னோர் கூற்றையும் அழித்து, ஒழித்துக்கட்டி, மக்களுக்கு புது எண்ணங்களை - அறிவை உண்டாக்க வேண்டும் என்று பாடுபட்டு வந்ததே இம்மாற்றங் களுக்கு வழியேற்படக் காரணமாயிற்று.
கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் கூற்று ஆகியவைகளை எதிர்க்கவும் அழிக்கவும், ஒழிக் கப்படவும் துணிவு எனக்கு எப்போது, ஏன் வந்தது; எப்படி வந்தது என்றால் மேற்கண்ட அவை எல்லாம் மனித சமுதாயத்தின் காட்டுமிராண்டிக் காலமான சுமார் 2000-3000 ஆண்டுகளுக்கு முந்தின மிருகப்பிராயத்தில் ஏற்பட்டவைகளே. அக்காலம் அறிவில்லாத காலம் என்பது மாத்திரம் அல்லாமல்; தாய்-மகன், தந்தை-மகள், அண்ணன்  - தங்கை என்பவைகளான முறை பேதங்கள் இல்லாத காலம். அவை மாத்திரமா ? பகுத்தறிவு, சிந்தனை அற்ற காலம் ; வளர்ச்சி என்பதாக ஒரு தன்மை இருக்கிறது என்பதே தெரியாத காலம்.
சாதாரணமாகக் கந்த புராணம், வாயு புராணம், பாரத புராணம், இராமயண புராணம் முதலிய கடவுள் சம்பந்தமான, மதசம்பந்தமான, சாஸ்திர சம்பந்தமான சாஸ்திர புராண இதிகாசங்களையும், சிவ புராணம், விஷ்ணு புராணம், பாகவதம், வெகு சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட பக்த விஜயம், திரு விளையாடல் புராணம், பெரிய புராணம் முதலிய ஆதாரங்களையும், இலக்கியங்களையும் பார்த் தாலே நல்ல வண்ணம் உண்மை விளங்கும்.
மற்றும் இந்த மடமைக் கூளங்களை இன்றைய தினத்திலேயே நம்மில், 100க்கு - 90க்கு மேற்பட்ட மக்கள், அதிகம் புலவர், பண்டிதர், வித்துவான், மகாமகோபாத்தியாய, பி.ஏ., எம்.ஏ., டாக்டர் பட்டம் பெற்ற பெரிய படிப்பாளி, அறிவாளிகள் என்பவர் களெல்லாம் கூட நம்பி, அதன்படி நடக்கத் துணிந்தவர்களும் இருக்கிறார்கள் என்றால், பக்தி என்றாலே, இதைக்காட்டுமிராண்டிக் காலத்திய கற்பனையை நம்புவதும், நடிப் பதும் அதற்கேற்ற கோயில், குளம், உற்சவம், பண்டிகைகள் ஆகிய வைகளை ஏற்படுத்தி பரப்பி கொண்டாடி வந்தனர் என்றால், அறிவிலிகள் எவ்வளவு மோசமாக ஏற்பட்டவர்களாக காட்டுமிராண்டி களாக இருந்திருக்க மாட்டார்கள்?
அந்தத் துணிவில் அதிசயம் ஏது?
அவ்வளவு ஏன், கிரகணங் களை நம்புகிறவர்கள் எத்தனை பேர்? இன்றுகூட சாதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் இந்தி யாவுக்கு அப்பால் உலகம் இருப்ப தாகவே தெரியாதோர் எத்தனை? இன் றைக்கு 150, 200, 300 ஆண்டு களுக்கு முன் நம் நிலை என்ன என்று பார்ப்போமானால் - நெருப் புக்குச்சி ஏது? ரயில், கார், கப்பல், ஆகாயக்கப்பல் ஏது? நடக்க நல்ல பாதை ஏது? இந்த நிலைமையில் உள்ள மக்களின் மூட காட்டு மிராண்டி நம்பிக்கையான - அதன் தோற்றங்களான கடவுள், மதம், சாஸ்திரம், பெரியோர் கருத்து என் பவைகளை ஒழிக்க ஒரு மனிதன் துணிவு கொள்ளுவானானால், அத் துணிவில் அதிசயம் ஏது? எப்படியிருக்க முடியும்?
பகுத்தறிவுள்ள மனிதனாக இருந்து கொண்டு, கடவுள், மதம், சாஸ்திரம், பெரி யோர் கருத்து என்பனவாகியவைகளை நம்புவதும்; அழிக்காமல், ஒழிக்காமல் இருப்பதும் - பின்பற்றுவதும்தான் முட் டாள்தனமான; காட்டுமிராண்டித்தனமான துணிவு கொண்ட தன்மையாகும் என்று சொல்லலாம்.
மூடனுக்கும் புரியாமல் போகாதே
நிற்க, மேலே கண்ட எனது துணிவான கருத் துக்களால், பிரசாரத்தால் இவ்வைம்பது ஆண்டுக் கப்பால் நம் நாட்டாருக்கு மனித சமுதாயத்துக்கு ஏற்பட்ட தீமை என்ன? கேடு என்ன என்று பார்த் தால்; ஒரு சாதாரண மனிதனுக்கும், அவன் கடு களவு சிந்தனையாளனாக இருந்தால் ஒன்றும் ஏற்பட வில்லை என்பதோடு மேலே காட்டப்பட்ட அனேக நன்மைகள் ஏற்பட்டிருப்பது தெரியாமல் போகாதே.
அது மாத்திரமா? இந்தக் கடவுள், மதம், சாஸ் திரம், முன்னோர் கருத்து என்பவைகளால் நாட் டுக்கு - மனித சமுதாயத்திற்கு ஏற்பட்ட கேடுகளும், வளர்ச்சித் தடைகளும் எப்படிப்பட்ட மூடனுக்கும் புரியாமல் போகாது. எனவே நான், 93 ஆண்டு வாழ்ந்ததை வீண் வாழ்வு என்று கருதவில்லை - என் பணிகளை வீண்பணி என்றும் கருதவில்லை.   இனிமேலும் வாழ்வதைத்தான் கஷ்டமாகக் கருதுகிறேன். என் உடல் நிலைமை மிக மோசமாகி விட்டது. நினைவு சரியாக இல்லை . மறதி அதிகம். கண், காது சரியாக இல்லை. கால்கள், நடக்கவே முடிவதில்லை . அசதி அதிகம்.
இப்படிப்பட்ட நிலையிலும் சற்று மகிழ்ச்சி, சிறிது உற்சாகம் கொள்ளுகிறேன் என்றால், இன்று நமக்கு வாய்த்திருக்கும் தி.மு.க. ஆட்சிப் பணி களால்தான். காரணம் என்னவென்றால், இதன் முன்னர் இருந்த ஆட்சியின் யோக்கியதைகளை அவைகளால் நாட்டுக்கு - சமுதாயத்திற்கு ஏற்பட்ட கேடுகளை ஒழித்துக் கட்டாததால் சமுதாய விஷயத்தில், ஜாதி அமைப்பு விஷயத்தில், கல்வி விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார்கள்; என்ன கொள்கை மேற்கொண்டார்கள் என்பவை களைச் சிந்தித்தால் தெரிய வரும்.
ஏதாவது பொல்லாத வாய்ப்பால் இப்போதைய இந்த தி. மு. க. ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் காலம் ஏற்பட்டால், வேறு எந்த ஆட்சிவரும், அதன் பலன் என்ன ஆகும் என்பவைகளை சிந்தித்தால் பெரும் பயம் ஏற்படுகிறது. மற்றபடி மகிழ்ச்சியோடு இதை முடிக்கிறேன்.
           ------------------------- ஈ.வெ.ராமசாமி - தந்தை பெரியார் 94ஆவது பிறந்த நாள் 'விடுதலை' மலரிலிருந்து.... - 17.9.1972

          ********************************************************************

எனது 95ஆம் ஆண்டு பிறந்த நாள் துவக்கத்துக்கு வழமைபோல் ஆண்டு மலரில் ஒரு கட்டுரை எழுதவேண்டியிருக்கிறது. அதை முன்னிட்டு இக்கட்டுரை எழுதுகிறேன், அப்படி எழுதப்படும் இக் கட்டுரை என்னால் ஆண்டு மலர்களுக்கு எழுதப்படும் கட்டுரைகளில் இதுவே கடைசியான கட்டுரையாக இருந்தாலும் இருக்கலாம். ஏன் இப்படி எழுதுகிறேன் என்றால், அடுத்த ஆண்டு மலர் எழுதப்பட வேண்டிய காலத்தில் நான் இருப்பேனோ, இல்லையோ என்கிற பிரச்னை மாத்திரமல்லாமல், எழுதும்படியான வாய்ப்பு இருக்குமோ, இருக்காதோ என்பதே முக்கிய காரியமாகும். ஏனெனில், இன்னும் நாம் இருப்பது போலவே அதாவது, இந்திய ஆட்சி என்பதற்குள் பிரஜையாகவும், சமுதாயத்தில் நாலாஞ் சாதி (சூத்திர மக்களா கவும்) சட்டப்படி, சாஸ்திரப்படி பார்ப்பானின் தாசி மகன் என்னும் பெயருடன் நமது தாய்மார்கள் பார்ப்பானின் தாசிகளாகவும் இருக்கும் தன்மையாலேயே இருப்போமா என்கின்ற கருத்தைக் கொண்டே இப்படி எழுதுகிறேன். !
நம்மில் பலர் சிறையில் இருக்க நேரிடலாம்
இந்திய அரசியல் சட்டப்படி நாம் இந்திய ஆட்சியில் பிரஜையாய் இருக்கும்வரை இந்துவாய் அதாவது, கிறிஸ்துவனாகவோ, முஸ்லீமாகவோ நாம் மதம் மாற்றிக் கொள்ளாதவரை நாம் நமது பண்டார சன்னதிகள் உட்பட பவுத்தனுக்கும், ஜெயினனுக்கும் சமானமாக இருக்கும்படியாக இருந்தாலும், பகுத்தறிவுவாதியாக இருந்தாலும், வேறு எந்தப் பெயரில் வாழ்ந்து வருபவனாக இருந்தாலும் சூத்திரனாகத்தான், பார்ப்பானின், தாசி மகனாகத்தான் இருந்தாக வேண்டும். இது தான் இன்றைய இந்திய அரசியல் சட்டமாகும். இந்த சட்டத்தைத் திருத்தவோ மாற்றவோ நம் மக்களுக்கு ஒருநாளும் சக்தியோ, உரிமையோ ஏற்படும் என்று கருதவே முடியாத நிலையில் இருக்கிறோம். அது மாத்திரமல்லாமல் இந்திய ஆட்சியில் இருந்து தமிழ் நாட்டை விலக்கிக் கொள்ள முயற்சி செய்தே ஆகவேண்டிய ஒரு கட்டாயமான - நிர்பந்தமான நிலையில் இருக்கிறோம். இந்த முயற்சியில் நாம் இந்திய ஆட்சியிலிருந்து விலகிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுமா என்பது பற்றி நமக்கு முடிவு செய்து கொள்ள முடியாமல் இருந்தாலும் இம் முயற்சியில்
நாம் பலர் சிறையில் இருக்க நேரிடலாம் என்கிறதாலேயேதான் இந்தப்படி எழுதுகிறேன்.  உடனடியாக விடுதலை முயற்சியில் ஈடுபட வேண்டும் நமக்கு இன்றைய இந்திய ஆட்சியில் அரசியல் பிரச்னை எப்படி இருந்தாலும், சமுதாயப் பிரச்னையில் நாம் இன்று இருக்கும் இழி தன்மையில் இருந்து, அதாவது சூத்திரனாக, தாசி மகனாக நம் தாய்மார்கள் தாசிகளாக சட்டப்படி, சாத்திரப்படி இருக்கும் நிலைமையை மாற்றிக்கொள்ள முயற்சிக்காமல் நாம் இருக்க முடியுமா? இந்தியாவில் நாம் இருக்கும்வரை இந்துவாகத்தானே இருந்து ஆகவேண்டும். இந்து என்றாலே, முஸ்லீம், கிறிஸ் துவம் தவிர மற்ற யாவருமே சூத்திரர் தாசி மக்கள் தான் என்று இருப்பதால், ஏதாவது முயற்சி செய்து தான் ஆகவேண்டும். நம் மக்கள் எளிதில் மதம் மாறமாட்டார்கள். மதம் மாறுவதை இழிவாய்க் கருதுபவர்களாவார்கள். ஆதலால் நாம் உடனடியாக விடுதலை அதாவது இந்திய கூட்டாட்சியிலிருந்து விலகி சுதந்திரத் தமிழ் நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இம் முயற்சிக்கு இன்றைய நம் தி.மு.க. ஆட்சி இணங்கும் என்று கருதமுடியாது.
ஏனெனில், தி.மு.க. ஆட்சி விரும்புவதெல்லாம் இந்திய கூட்டாட்சி ஆதிக்கத்திற்கு உள்பட்ட மாகாண சுயாட்சிதான் அது விரும்புகிறது. மாகாண சுயாட்சி என்றால், அரசியலில் தான் ஏதோ சில மாறுதல்களைச் செய்து கொள்ள முடியுமே தவிர சமுதாயத் துறையில் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஒரு காரியமும் செய்ய முடியாது. 'இந்து' என்றால் சட்டப்படியான விளக்கம் இந்திய அரசியல் சட்டத்தில் சமுதாய (மத) சம்பந்தமான காரியங்களைப் பற்றி பழைய மனுதர்ம நிலையை மிகமிகப் பலப்படுத்திக்கொண்டபடியிருக்கிறது. உதாரணமாக சொல்ல வேண்டுமானால், கர்ப்பகிரகத்திற்குள் சூத்திரன், அதாவது பண்டார சன்னதி உட்பட இந்து என்ற தலைப்பில் வரும் எவருமே, பார்ப்பான் தவிர்த்து எவருமே செல்ல முடியாதென்று உயர்நீதி (சுப்ரீம்) மன்ற தீர்ப்பு இருப்பதினாலும், இன்னும் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கென்று போகும் யாருமே தீண்டத்தகாதவர்கள்போல் வாயில்படிக்கு வெளியில் தான் எட்டி நிற்கவேண்டும் என்றால், மற்றப்படி எ தில் நாம் மாறுதலைக் காணமுடியும் ?
இன்று அமுலில் இருக்கும் இந்து லா என்னும் சட்டத்திலும், பல உயர் நீதி மன்றங் களின் தீர்ப்பிலும், பார்ப்பனரல்லாத இந்து மக்கள் என்பவர் களை மிகமிக இழிவாகக் கூறி, நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இந்து என்னும் சொல்லுக்கு சட்டத்தில் கொடுத்திருக்கும் விளக்கம் என்னவென்றால், "கிறிஸ்துவர்கள்- முஸ்லீம்கள் தவிர்த்த இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருமே இந்துக்கள் ஆவார்கள்.'' இதன்படி நாத்திகன், பகுத்தறிவுவாதி, பரதேசி முதலிய சகலரும் இந்துக்கள் ஆகி சூத்திரர், பார்ப்பானின் தாசி மகன் என்று  ஆகிவிடுகிறார்கள்.
சுயமரியாதை இயக்கத்தின் 50 வருட சாதனை
நான் முதலில், நான் இந்து அல்ல என்று சொல்லிவிட்டால் இழிவு நீங்கிவிடும் என்று தான் கருதினேன். பிறகு சட்டங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகு கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் தவிர்த்த, இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் இந்துக்கள் - இந்துக்கள் என்றால் சூத்திரர்கள், வேசி மக்கள் என்று பல இடங்களில் காணப்படுகின்றன. ஆதலாலேயே தீவிர முயற்சி எடுக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இன்று நம் நாட்டில் இந்துக்கள் எல்லோருக்குமே அரசியலில் தான் முக்கிய கவனம் இருக்கிறது. அன்றியும் நாட்டுப் பிரிவினை என்றால், எல்லா மக்களுமே பயப்படுகிறார்கள். காரணம் பதவி கிடைக்காதே என்கின்ற காரணம் மாத்திரமல்லாமல், சிறைக்குச் செல்ல வேண்டுமே என்றும் பயப்படுகிறார்கள். 50 வருஷ காலமாக சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன என்று பார்த்தால், சிறிது படிப்பு - பல பதவி உத்தியோகம் பெற நேர்ந்ததோடு அரசியலில் பார்ப்பனர் கொட்டத்தை நல்ல அளவுக்கு அடக்கிற்று என்பதல்லாமல் சமுதாயத் துறையில் உள்ள அடிப்படை இழிவு நல்ல அளவுக்கு பலம் பெற்றுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.  எனவே, நாம் சட்டத்தைப் பற்றி பயப்படாமலும், பதவி கிடைக்காதே என்று கவலைப் படாமலும், சுதந்திரத் தமிழ்நாடு பெற ஒவ்வொருவரும் முடிவு செய்து கொண்டு முன்வர வேண்டியது ஒவ்வொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதை பணிவோடு தெரி வித்துக் கொள்கிறேன்.  "சுதந்திரத் தமிழ்நாடு எனது இலட்சியம் ''
என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச் சொல்லாகக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். பதினாயிரக் கணக்கில் பாட்ஜுக்கு ஆர்டர் கொடுத்து தயார் செய்து மக்களுக்கு வினியோகிக்க ஆசைப்படுகிறேன். பொது மக்களுக்கும் இதுவே இலட்சியச் சொல் (கூப்பாடாக) லாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பொது மக்களே ! இளைஞர்களே ! பள்ளி, கல்லூரி மாணவர்களே ! மாணவிகளே! உறுதி கொள்ளுங்கள்! உறுதி கொள்ளுங்கள்!! உறுதி கொள்ளுங்கள்!!!
            --------------------- ஈ.வெ.ராமசாமி - தந்தை பெரியார் 95ஆவது பிறந்த நாள் 'விடுதலை' மலரிலிருந்து.... - 17.9.1973 
    

கருப்பா - காவியா?


திராவிட மாணவர் கழகப் பவள விழா மாநாட்டில், திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பேரணியில் சாரட்டில் அழைத்து வரப்பட்டாராம்.
அடேயப்பா - சில ஆரிய அடிமைகளுக்கு எத்தகைய ஆத்திரம் - வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு சந்திரமதி ஒப்பாரி வைப்பது ஏன்?
ஒரு மாநாட்டுப் பேரணியில் ஒரு இயக்கத்தின் தலைவரை சாரட்டில் அமர வைத்து அழைத்து வருவது "பஞ்சமா பாதகமா?"
தந்தை பெரியார் எத்தனை எத்தனை ஊர்வலங் களில் அவ்வாறு அழைத்துவரப்பட்டிருக்கிறார்.  மக்கள் வெள்ளத்தில் - பவனி வந்துள்ளார்!
ஜாதி ஒழிப்புப் போராட்டமான இந்திய அரச மைப்புச் சட்டத்தின் பகுதி கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்று விடுதலையான தோழர்க ளுக்கான பாராட்டு விழாவின்போது சிதம்பரத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் தந்தை பெரியார் இதேபோல அழைத்து வரப்படவில்லையா?
அந்தக் காட்சியைப் பற்றி புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் அவர்களால் பாடப்பட்டதுதான் “அவர்தாம் பெரியார்” என்ற அந்த ஒப்பற்ற பாடல்.
ஓர் உழவன் தன் மனைவியிடம் கூறுவதுபோல அமைந்த அந்தப் பாடல் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாயிற்றே!
அவர்தாம் பெரியார் - பார்
அன்பு மக்கள் கடலின் மீதில்
அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்
என்றார் புரட்சிக்கவிஞர்.
அந்த அறிவுத் தேக்கமான தந்தை பெரியார், தங்கத் தேரில் பவனி வந்ததாக மகிழ்ச்சிக் கூத்தாடுகிறாரே புரட்சிக் கவிஞர்.
அந்தத் தந்தை பெரியாரின் மாணவர் - அவரால் அடையாளம் காட்டப்பட்ட 75 ஆண்டு அப்பழுக்கற்ற பொது வாழ்வுக்குச் சொந்தக்காரரான தமிழர் தலைவரை ஒரு சாரட்டில் அழைத்து வந்தது கூடாத செயலா? கருஞ்சட்டை தோழர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில் - சூத்திரப்பட்டத்தை ஒழிப்பதற்காகவே குடந்தையில் பிரசவித்த திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டில் தந்தை பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்தி, சமூக நீதிக் கொடியை வானளாவப் பறக்கவிட்டு தந்தை பெரியார் கொள்கையை உலகெங்கும் பரவும் வகை செய்து மாதம் ஒன்றுக்கு 20 நாள்கள் சுற்றுப்பயணம் செய்து தன்மான பகுத்தறிவுப் பெரும் பணியை ஆற்றிவரும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்றவர்களால் 'தமிழர் தலைவர்' என்று போற்றப்படும் மதிக்கப்படும் ஒரு தலைவரை இயக்கத் தொண்டர்கள் சாரட்டில் அமர வைத்து, கொள்கை முழக்கமிட்டு அழைத்து வந்தது கொள்கை பிரச்சாரக் கண்ணோட்டத்தில் குறிப்பிடத்தக்க அணுகு முறையே!
அந்தப் பாடலில் புரட்சிக் கவிஞர் மேலும் பாடுகிறார்:
மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு
வஞ்சகர்க்கோர் கொடிய நெருப்பு
மிக்க பண்பின் குடியிருப்பு
விடுதலைப்பெரும்படையின்தொகுப்பு
வஞ்சகர்க்கோர் கொடிய நெருப்பு என்று எவ் வளவுத் தொலைநோக்கோடு தொட்டுக் காட்டியுள்ளார் கவிஞர்.
அந்த வஞ்சகர்கள் இன்னும் வற்றிப் போய்விட வில்லை. விடுதலைப் படையினை - விடுதலை என்னும் போர் ஆயுதத்தை நாளும் சுழற்றிவரும் தலைவர்மீது சேற்றை வாரி இறைக்க ஆசைப்படும் அந்த வஞ்சகர்களை தமிழர்கள் அடையாளம் காண வேண்டும். அவ்வளவுதான். குரைப்பதற்கெல்லாம் பதில் வேண்டாம். கொள்கையை நோக்குவதே நம் ஒரே குறி!
ஒரு வரலாறு தெரியுமா இந்தக் குட்டிச் சுவர் வாசிகளுக்கு? 1948ஆம் ஆண்டு அக்டோபர் 23, 24 நாள்களில் ஈரோட்டில் திராவிடர் கழக 19ஆம் மாநில தனி மாநாடு.
அந்த மாநாட்டு ஊர்வலத்தில் என்ன நடந்தது தெரியுமா?
அறிஞர் அண்ணாவை சாரட்டில் உட்கார வைத்த தந்தை பெரியார் அந்த ஊர்வலத்தில் கடைசி வரை நடந்தே வந்தார் என்ற வரலாறு தெரியுமா? இந்த வக்கிரங்களுக்கு.
கருப்புச்சட்டை அணிந்து மேல் துண்டை இடுப்பில் கட்டி அந்த 69 வயதில் சிங்க நடை போட்டு வந்தார் பெரியார் என்று கவிஞர் கருணானந்தம் அவர்கள் 'தந்தை பெரியார்' என்னும் வரலாற்று நூலில் அருமையாகக் குறிப்பிடுகிறார்.
தந்தை பெரியார் அவர்களோடு ஆசிரியர் வீரமணி அவர்களும் ஊர்வலத்தில் அமர்ந்து பவனி வந்த மற்ற பதியங்களை அறியுமா இந்தக் கத்துக்குட்டிகள்?
ஒன்றை நமது தோழர்கள் உணரவேண்டும். அவர்களின் கோபம் சாரட் வண்டியில் தமிழர் தலைவர் வந்ததல்ல.
சினத்துக்குக் காரணம் அந்தக் கும்பகோணம் மாநாடு! ஆத்திரத்துக்குக் காரணம் அந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கில் மாணவச் சிங்கக் குட்டிகள் கர்ச் சனை செய்து அணிவகுத்து வந்தார்களே அதுதான் காரணம்!
எங்கே இருந்து கிளம்பியது இந்த இளைஞர் சேனை - மாணவர் பட்டாளம்? திராவிடர் கழகம் இவ்வளவு பலம் வாய்ந்ததா? பெரியாருக்குப் பின் அஸ்தமனம் ஆகிவிடும் என்று அண்டா அண்டாவாக மனப்பால் குடித்துக் கிடந்தோமே - ஏமாந்து விட்டோம் - ஏமாந்து விட்டோம்!
இந்தக் கருஞ்சட்டைப் பட்டாளம் மேலும் மேலும் வாலிப வீரத்தோடு வளரத்தான் செய்யும் போலும் என்ற ஆற்றாமையால் அசிங்கத்தைப் பேனாவில் ஊற்றி எழுதுகிறார்கள்.
ஆரியம் எப்பொழுதும் நேருக்கு நேர் வராது, வந்த தும் இல்லை. அப்படி வந்தால் தானே என்றைக்கோ கதை முடிந்திருக்குமே! ஆனால் அதற்கு எடுபிடிகள் எப்பொழுதுமே மலிவாக நமது இனத்தில்தான் கிடைப்பார்களே - இது இன்று நேற்றல்ல காலந்தொட்டு தொடர்கிற தொடர்கதை தானே.
நாம் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? அவர்களின் ஆபாச எழுத்துகளுக்கு அதே பாணியில் பதில் அளித்துக் காலத்தைக் கழிக்க வேண்டாம்.
'விடுதலை'யில் நேற்று நமது தலைவர் வெளியிட்ட அறிக்கையினைப் படியுங்கள் - படியுங்கள்.
இழிமொழிகளால் சோர்ந்தோமா? மாறாக வீறு கொண்டு எழுந்தோமா என்று காட்ட வேண்டிய தருணம் இது.
பள்ளிகளில் எல்லாம், கல்லூரிகளில் எல்லாம், பல்கலைக்கழகங்களில் எல்லாம் திராவிட மாணவர் கழக அமைப்பு தொடங்கப்படட்டும் - தொடங்கப் படட்டும்!
புறப்பட்டது காண் புலிப் போத்துகள் - சிங்கப் புயல்கள் என்று எதிரிகள் நடுநடுங்க வேண்டும், துரோகிகள் தொடை நடுங்கி பதுங்க வேண்டும்.
குடந்தை மாநாட்டை வெற்றி முகட்டில் நிறுத்தி விட்டோம் என்ற மகிழ்ச்சியோடு நம் பணி முடிந்து விட்டதாகக் கருதக் கூடாது.
குடந்தை மாநாடு புத்தெழுச்சியை - ஊட்டியது - புது வரலாற்றைப் படைக்கப் பல்லவியைக் கொடுத்து விட்டது - தந்தை பெரியார் பணியை தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் தலைமையில் முடித்திட - புதிய தலைமுறை புறப்பட்டு விட்டது - புதிய புறநானூற்றை எழுதத் துடிக்கிறது என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.
அதுதான் குடந்தை மாநாடு முழு வெற்றி கண்டதற்கன பதவுரை - பொழிப்புரை - கருத்துரை!
கருஞ்சட்டை இளஞ்சேனையே - காரியத்தில் கண் வைத்துக் கடமையாற்றுவோம்.
காவிகள் விரிக்கும் வலைகளை, கூண்டுகளை நொறுக்குவோம் - காவியா - கருஞ்சட்டையா என்று ஒரு கை பார்ப்போம்.
தமிழ் மண் தந்தை பெரியார் மண்ணேதான் என்பதை வரலாற்றுக்கு மீண்டும் நிரூபிப்போம்!
தமிழ்நாட்டு மாணவர்களும், இளைஞர்களும் நம் பாசறை நோக்கிப் பயணிக்க வேண்டும் அதற்கான ஆயத்தப் பணிகளை இந்தக் கணம் முதலே தொடங்குவோம்.
நமக்குக் காரியம்தான் முக்கியமே தவிர வெத்து வேட்டு விளையாட்டு வீரியமல்ல!
கதிரவனைக் கண்டு குரைப்பதுகள் பக்கம் கவனச் சிதைவு வேண்டாம்.
கால்சட்டைப் பருவம் முதல்
தந்தை பெரியார்
தடத்தை விட்டு
தவறிக்கூட
கால் பதிக்காத
தன்மானத் தலைவர்
நமக்கு மட்டுமே உண்டு
86இல் அவரது பொது வாழ்வின் காலம்
76 - இந்த அளவுகோல் வேறு யாருக்கும் கிடைக்காத ஒன்று!
குடந்தையில் நமது மாணவர்கள் எடுத்துக் கொண்ட உறுதி மொழிப் பதிவையும் யாரும் ஒரு கணம் எண்ணிப் பார்க்கட்டும்!
வேறு எங்கு எந்த அமைப்பில் இந்த ஒழுகலாறுகள் உண்டு? நமக்கு நிகர் நாமே! படை நடத்துவோம் பண்போடு, பணி முடித்திடுவோம் உறுதியோடு!
        ------------------------ மின்சாரம் அவர்கள் 11-7-2018 ‘விடுதலை’ இதழில் எழுதிய கட்டுரை

    

நாயன்மார் முத்திபெற்ற விதம் - பெரியார்

நாயன்மார் முத்திபெற்ற விதம்!


பெரிய புராணத்தில் காணும் நாயன்மார்கள் பலர் அவர்களில் அறுபத்துமூவர் சிறந்தவர்கள்.

 
இவர்கள் "நற்கருமங்கள் செய்து கைலாயத்தை அடைந்தவர்கள்." இதில் "கடவுளே நேரில் வந்து முக்தி கொடுக்கப்பட்டவர்கள் பலர்."
 
முக்தி பெற இவர்கள் செய்த நற்கருமம் என்ன? என்பது பற்றி சிந்திப்போம்.

 
1.திருநீலக்கண்ட நாயனார்

 
இவர் ஜாதியில் குயவர். நடத்தையால் மிக்க இழி நிலை உடையவர். அதாவது காமக்காந்தகரராய் திரிந்தவர் என்பதை அறிந்து இவரது மனைவியார் தம்மை இனி தீண்டக் கூடாது என்றார்.
 
அதனால் இவர் எந்த மாதரையும் தீண்டாமல் இருந்தார். இவை அறிந்து பரமசிவன் வந்து முக்தி அளித்தார்.

 
2.இயற்பகை நாயனார்

 
அவர் தனது மனைவியை ஓர் அயோக்கியப் பார்ப்பான் விரும்ப, அவனுக்கு அளித்து விட்டார்! அதற்காக சிவபெருமான் வந்து முக்தி அளித்தார்.

 
3.இளையான்குடிமாற நாயனார்

 
இவர் மனைவி தனது வீட்டுக் கூரையைப் பிடுங்கி அடுப்பெரித்து ஒரு பார்ப்பானுக்கு சோறு சமைத்துப் போட்டார்.
 
அதற்காக சிவபெருமான் வந்து இருவருக்கும் முக்தி அளித்தார்.

 
4.மெய்ப்பொருள் நாயனார்

இவர் ஓர் அரசர். இவருக்கு ஞானாபதேசம் செய்வதாய், இந்த அரசரது பகைவன் சிவனடியார் வேடம் தரித்துக்கூற, இவர் மெய்யெனக்கருதி வணங்கும்போது இவரை சிவனடியான் கொன்று விட்டான். அந்த சிவனடியானை, அரசனின் ஆள் கொல்லுகையில் சிவன் வந்து தடுத்தார். இதனால் இவர் முக்தி பெற்றார்.
 
5.அமர்நீதி நாயனார்
 
இவரிடம் ஒரு பிரம்மச்சாரி கொடுத்து வைத்த கோவணம் காணாமல் போனதால் அதற்காக சரி எடையாக வேறு துணி கொடுப்பதாகக் கூறி, ஒரு கோவணத்துணிக்கு சரி எடை பார்க்கையில் தானும் தன் மனைவியும் திராசுத் தட்டில் உட்கார்ந்து சரி செய்து அந்த பிரம்மச்சாரிக்கு தங்களை அடிமைப்படுத்திக் கொண்டார்கள்.
அதனால் சிவன் இவர்களுக்கு முக்தி கொடுத்தார்.
 
6.எறிபத்த நாயனார்
 
இவர் வேறு ஒரு சிவனடியார் கடவுளுக்குப் பூசை செய்ய பூக்குடலை எடுத்து வருகையில் ஒரு யானை அந்தப் பூக்குடலையைப் பிடுங்கி நாசமாக்கிவிட்டது. அதுகேட்டு எறிபத்த நாயனார் அந்த யானையையும் யானைப் பானையும் வெட்டிக் கொன்றுவிட்டார். இதற்காக சோழராஜன் விசாரித்து அக்குற்றத்திற்குத் தன்னை கொல்லும்படி உடைவாளை எறிபத்தரிடம் கொடுத்தார். எறிபத்தர் அதை வாங்கி தன் கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றார். இதற்காக சிவன் வந்து முக்தி அளித்தார்.
 
7.ஏனாதி நாயனார்
 
இவரை இவரது பகைவன் கொல்ல நெற்றியில் விபூதி தரித்து வந்து விபூதிப் பையைக் காட்ட நாயனார் வணங்கி செயலற்று நிற்க உடனே பகைவன் கொன்றுவிட்டான். அதற்காக சிவபெருமான் முக்தி கொடுத்தார்.
 
8.கண்ணப்ப நாயனார்
 
இவர் தனது இரண்டு கண்ணையும் தோண்டி எடுத்து கடவுளுக்குப் புதைத்து தான் குருடனாக இருந்து கொண்டே கடவுளுக்குப் பூசை செய்தவர்.
 
இவரது இரண்டாவது கண்ணைப் பிடுங்கி கடவுள் கண்ணில் புதைக்கும் போது, கடவுளின் கண் இருக்குமிடம் தெரிவதற்காக தனது ஒரு செப்புக்காலை கடவுள் கண் இருக்குமிடத்தில் வைத்து அடையாளம் கண்டுபிடித்து கண்ணை ஒட்ட வைத்தார்.
 
பன்றி மாமிசத்தைச் சுவைத்து ருசி பார்த்து கடவுளுக்கு ஊட்டினார். அதனால் சிவபெருமான் இவருக்கு முக்தி அளித்தார்.
 
9.அரிவாட்ட நாயனார்
 
இவர் தனது செந்நெல் அரிசியைக் கடவுளுக்குப் படைத்துவிட்டு தாம் கார்நெல் அரிசி சாப்பிட்டு வந்தார். அந்த ஊரில் கார்நெல் அரிசி விளையவில்லை. அதனால் பசியோடு இருந்தே செந்நெல் அரிசியை கடவுளுக்கு படைத்து வந்ததால் ஒரு நாள் படைக்க எடுத்துக் கொண்டு கோவிலுக்கு போகும்போது பசி களைப்பால் கால் இடறி விழுந்து விட்டார். படைப்பு உணவு கீழே சிந்திவிட்டது. கடவுளுக்கு இன்று படைக்க உணவு இல்லையே என்று கருதி நாயனார் தன் கழுத்தை அறுத்துக் கொள்ள கத்தியை கழுத்தில் வைத்தார். இதனால் சிவபெருமான் இவருக்கு முக்தி கொடுத்தார்.
 
10.ஆனாய நாயனார்
 
இவர் புல்லாங்குழலில் பஞ்சாட்சரத்தை வாசிப்பார். சராசரங்கள் எல்லாம் ஸ்தம்பித்து நிற்கும். இதனால் சிவபெருமான் இவருக்கு முக்தி அளித்தார்.
 
இந்தப் பத்து நாயன்மார்கள் முக்தி பெற்ற சரிதம் இது. இதைத்தான் பெரிய புராணம் கற்பிக்கிறது. இன்னும் உள்ள நாயன்மார் சரித்திரம் பின்னால் வரும்.

இப்படித்தான் பக்தி செலுத்துவதா? இதற்குத்தான் சிவபெருமான் முக்தி கொடுப்பதா?
 
இதில் இருந்து பக்தர்கள் எவ்வளவு முட்டாள்களாக இருக்க வேண்டி இருக்கிறது?
 
கடவுள்கள் எவ்வளவு இழிதன்மை உடையவர்களாக இருக்க வேண்டி இருக்கிறது?
 
இவைகளை சிவபக்தர்களும், ஆஸ்திகர்களும், புலவர்களும், பெரிய புராணத்தைப் படிக்க வேண்டும் என்று கூறும் சர்.ஆர்.கே.சண்முகம் அவர்களும் மற்றும் கலைவாணர்களும் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்.


                -----------------------------சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தை பெரியார் அவர்கள் சொற்பொழிவு "விடுதலை" 06.05.1950
    

More Recent Articles


You Might Like

Safely Unsubscribe ArchivesPreferencesContactSubscribePrivacy